சைக்கிள் ஒரு காலத்தில் பல சிறுவர் சிறுமிகளுக்கு கனவு வாகனமாகவே இருந்து வந்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பள்ளிக்கு சைக்கிளில் வரவேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாகவே இருந்துள்ளது.
எப்பேர்பட்ட பாதையானாலும் சரி எவ்வளவு குறுகலான சாலையானாலும் சரி இந்த ஒரு வாகனத்தில் தான் எளிதில் நாம் அனைத்து வகையான சாலைகளிலும் செல்ல முடியும்.
இன்று பெரும்பாலும் பைக் அல்லது கார் என உபயோகித்து பழகிக் கொண்ட நாம் சைக்கிளின் அருமை பெருமைகளை மறந்தே போய் விட்டோம். அப்படி மறந்து போனவர்களுக்கு நினைவூட்டும் விதமாக ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்படுவது தான் உலக சைக்கிள் தினம்.
வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல அது மிகச்சிறந்த உடற்பயிற்சி சாதனமும் கூட. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் அதற்கு தாராளமாக சைக்கிளிங் தேர்வு செய்யலாம். உடலில் இருக்கும் வியர்வைகள் வெளியாவது மட்டுமின்றி தேவையற்ற கொழுப்புக்களையும் கரைக்கக் கூடியது இந்த சைக்கிளிங்.
முட்டியில் ஏற்படும் வலியையும் குணப்படுத்த கூடியது. இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு உடற்பயிற்சி. நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சைக்கிளிங் பெரிதளவு துணை புரிகிறது.
இன்றும் பெருநகரங்களில் வேலைக்குச் செல்லும் பலர் பஸ்சில் பயணம் செய்வதற்கு பதிலாக சைக்கிளை தேர்வு செய்கிறார்கள். சைக்கிள் பயணத்தில் உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமே நமக்கு பல புதிய நட்புகளும் அனுபவங்களும் தினமும் கிடைக்கிறது என்று கூறுகின்றார்கள். வழிநெடுக புது மனிதர்களை சந்தித்துக் கொண்டே சைக்கிளிங் செய்வது புதுவிதமான அனுபவம் என்கிறார்கள்.
நீண்ட தூரம் சைக்கிளிங் செய்ய விரும்புவோர் எடுத்த எடுப்பிலேயே அதிக தொலைவு செல்லாமல் சிறிது சிறிதாக தொலைவை அதிகரித்து சைக்கிளிங்கை ரசித்து மகிழலாம்.
தனியாக செல்வது ஒருவித அனுபவம் என்றால் நண்பர் குழுவோடு சேர்ந்து சைக்கிளிங் செய்தால் பேசிக்கொண்டே செல்லும்போது களைப்பும் தெரியாது.
இன்று சைக்கிள் வீலில் உள்ள காற்றின் அளவு ,வேகம் என்பதை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சைக்கிள்களிலேயே பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.