”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்….” என்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல் வரிகள் வரும்.
அந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் என்றால் அவர் தான். அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு பேரும் புகழும் வந்தது என்று எல்லோருக்கும் பிரமிப்பாக இருக்கலாம். மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் அவர். அதனால் தான் மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்டார்.
சராசரி மற்றும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுடன் அவர்களது வாழ்க்கையில் ஒரு அங்கத்தினராக பங்கேற்று அவரது கஷ்ட நஷ்டங்களுக்கு மருந்தாக இருந்து உதவிய உயர்ந்த குணம் தான் எம்ஜிஆரின் புகழை இன்றளவும் நிலைத்து நிற்கச் செய்கிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
எம்ஜிஆர் கோட்டைக்கு ஒருமுறை கிளம்புகிறார். அப்போது மலைபோல் குவிந்து கிடந்த கடிதங்களைப் பார்க்கிறார். அவற்றில் இருந்து ஒன்றை மட்டும் எடுக்கிறார். காரில் போய்க்கொண்டே பிரித்துப் பார்க்கிறார். அது ஒரு கல்யாணப் பத்திரிகை. அதில் எந்த இடத்திலும் எம்ஜிஆரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
எந்த இடத்திலும் உதவியும் கேட்கப்படவில்லை. இது எம்ஜிஆருக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுவரை படித்த எத்தனையோ கடிதங்களில் பிரதானமாக கோரிக்கைகள் தான் இடம்பெற்றிருக்கும். ஆனால் இதில் அப்படி ஒன்று கூட இல்லை. அதனால் தானோ என்னவோ பொன்மனச்செம்மலுக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
அதன்படி அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை விசாரித்து வர தனது உதவியாளர்களை அனுப்பி வைத்தார். கட்சிக்காரர் ஒருவரும், காவலரும் சென்றனர். பத்திரிகையில் வடபழனி ராம் தியேட்டர் அருகில் என முகவரியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்படி அருகில் சென்று பார்த்தால் அங்கு செருப்பு தைக்கும் தொழிலாளியின் இடம் தான் அது என்று தெரியவந்தது. அவர் செருப்பு தைப்பதற்குத் தேவையான கருவிகளுடன் சாமி படம் கூட இல்லாமல் ஒரு பெட்டியில் எம்ஜிஆரின் படத்தை ஒட்டி இருந்தார். இந்த விவரங்களைப் பொறுமையாகக் கேட்டார் எம்ஜிஆர். இப்படியும் நமக்கு ஒரு உண்மைத் தொண்டனா என நெஞ்சம் உருகுகிறார்.
திருமண நாளும் வந்தது. காலை 9 மணிக்கு முகூர்த்தம். சரியாக 8.45 மணி அளவில் அங்கு காவல்துறை அணிவகுப்பு நடந்தது. என்ன ஏது என தெரியாமல் கல்யாண வீட்டுக்காரர்கள் விழித்தனர். மணமகன் தாலியை கையில் எடுக்கும் முன் சில நிமிடங்களில் புரட்சித்தலைவர் அங்கு வந்து இறங்குகிறார். அதை அங்குள்ள மக்கள் யாரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
உண்மைத் தொண்டனோ இதயம் நொறுங்கி கண்கலங்கி நின்றான். அப்போது எம்ஜிஆர் தொண்டனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார். நீ மட்டும் தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா… நானும் கூட தான்..! என்று சொல்லி விட்டு காலை உணவை முடித்து அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார் எம்ஜிஆர்.
மதுரை வீரன் படத்தில் எம்ஜிஆர் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.