கூகுள் உட்பட பெரிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது வேலைக்கு ஆள் இல்லாத பற்றாக்குறை காரணமாக மீண்டும் ஆள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. H1B விசா இருக்கும் இளைஞர்களை குறைந்த சம்பளத்தில் இந்த நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் வேலைக்கு சேர இருக்கும் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கூகுள் உட்பட பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இழந்த இளைஞர்கள் தற்போது ஸ்டார்ட் அப் தொடங்கி நல்ல வருமானம் பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் வேலையை விட்டுவிட்டு வெளியே சென்று சொந்த தொழில் தொடங்க ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில் முன்னணி நிறுவனங்களில் இருந்து இளைஞர்கள் விலகி கொண்டிருப்பதால் மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்க கூகுள் உட்பட சில நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், ஜூம், ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான H1B விசா உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கூகுள் மற்றும் மெட்டா உட்பட அமெரிக்காவில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்களை அறிவித்ததை அடுத்து தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
H1B விசாக்கள் என்பது தற்காலிக பணி விசாக்கள் ஆகும். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் இந்த H1B விசாக்கள் பெற கடும் போட்டி உள்ளது. இந்த நிலையில் கூகுள் உட்பட பெரிய நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து குறைந்த ஊதியத்தில் H1B பணியாளர்களை பணி அமர்த்துவது சிலரிடையே கோபத்தை கிளப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் H1B தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க அவர்கள் போதுமான அளவு செயல்படவில்லை என்றும் வாதிடுகின்றனர்.
அமெரிக்க தொழிலாளர்களை பணியமர்த்துவதில் நாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தொழில்நுட்பத் துறையில் வெற்றி பெறத் தேவையான திறன்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் வளர்த்துக்கொள்ள பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதாகவும் நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.