கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன் பின் இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரே கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி பிடித்தது இல்லை என்பது வரலாறாக உள்ளது. எனவே ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது அந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்
கர்நாடக மாநில தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் கூறியுள்ளன. ஒரு சில ஊடகங்கள் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஒரு சில ஊடகங்கள் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் கூறியுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மதசார்பற்ற ஜனதா தளம் தனது வலிமையை காண்பிக்கும் என்றும் அது மட்டுமின்றி ஒரு சில எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் கூட முதலமைச்சர் பதவியை குமாரசாமி கேட்பார் என்பதும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தாங்கள் ஆட்சி அமைக்க தேவையான தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றும் 130 தொகுதிக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் உள்ளது. அதேபோல் பாஜகவும் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏ தங்களுக்கு கிடைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளதாகவும் மாநில முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்காக 36 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் மட்டும் ஐந்து வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்று தெரிவித்துவிடும் என்பதால் அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.