மதுரை சித்திரை திருவிழாவின் மணிமகுடமாக விளங்குவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். நாளை (2.1.2023) மதுரையில் கோலாகலமாக நடக்க உள்ளது. இந்த அதி விசேஷமான நாளில் பட்டாபிஷேகம் முடிந்து, திக் விஜயம் நடந்து மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரர் கரம்பிடிக்கிறார்.
முதல் பெண்ணரசி… மதுரையின் அரசி… மங்கல நாயகி உலகத்தையே ஆள்பவள் மீனாட்சி. ஒவ்வொரு பெண்ணுமே ஒரு அரசிக்குச் சமம் தான். ஒரு குடும்பத்தையே வழி நடத்துகிறாள். அதே போல ஒவ்வொரு ஆணும் குடும்பத்துக்கு அரசன்.
33 கோடி தேவர்களும் எதிர்பார்த்து காத்து இருந்து பார்த்த வைபவம் தான் இந்த திருக்கல்யாணம். நாம் எவ்வாறு வாழ வேண்டும்? திருமணம் எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என எதிர்காலத்தினரும் புரியும் வகையில் தான் ஆண்டு தோறும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து வருகிறது.
நாளை காலை திருக்கல்யாணம் காலை 8.35 மணி முதல் 8.59 வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நேரத்திற்குள் நாமும் மாங்கல்ய கயிறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திரு உருவப் படத்தைத் துடைத்து வைத்து பூஜைக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
காலையில் புதிதாக மலர்கள் சாற்றி நெய் விளக்கேற்ற வேண்டும். இது ரொம்பவே விசேஷம். ஏதாவது ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்யுங்கள். முடியாதவர்கள் 2 வாழைப்பழம், ஒரு வெத்தலைப்பாக்காவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
காலை 8 மணிக்கே பழைய தாலிக்கயிற்றிலிருந்து புதிய தாலிக்கயிற்றுக்கு நமது உருப்படிகள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை இப்படி மாற்றலாமா என கேட்பவர்கள் சந்தேகமில்லாமல் மாற்றலாம். ஏன்னா அன்று இறைவனுக்கேத் திருமணம் நடக்கிறது. அதனால் கிழமை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
கோர்த்து வைத்த திருமாங்கல்யத்தை வெத்தலைப் பாக்கு, பழத்துடன் உள்ள தாம்பூலத்தட்டில் வைத்து விடுங்க. அல்லது கோவில்களில் போய் பார்ப்பவர்கள் பார்க்கலாம்.
சாமி உடனேயே இருக்கும் சக்தியின் பெயர் பிரியாவிடை. அவருக்கும் அன்றைய தினம் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும். கணவர் அருகே இருந்தால் அவரது கையால் திருமாங்கல்யத்தைப் போட்டுக் கொள்ளலாம். கணவர் வெளியூர் போயிருந்தால் நீங்களே உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
சுவாமிக்கு தீபாராதனை நடக்கும் போது பார்த்து விடுங்கள். தொடர்ந்து நமது வீட்டிலும் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து சுவாமி படத்துக்குத் தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபட வேண்டும். கணவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். வெளியூரில் இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
ஒரு ஆண்டுக்கு 2 முறை தாலிக்கயிற்றை மாட்டிக் கொள்ளலாம். செயினில் மாட்டுபவர்கள் அந்த நாளில் மஞ்சள் கயிறை மாட்டிக் கொண்டு செயினைக் கழற்றி சுவாமிக்கு முன் வைத்து பூஜை செய்து திரும்ப போட்டுக் கொள்ளலாம்.