மீண்டும் பணியாளர்களை குறைக்கும் அமேசான்.. தொடரும் வேலை நீக்க நடவடிக்கையால் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

அமேசான் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சில பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை , வட்டி விகித உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் நிறுவனங்களின் வருவாய் குறைந்ததை அடுத்து சிக்கன நடவடிக்கையாக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

layoff அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் ஏற்கனவே வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் வெப் சர்வீஸ் என்ற பிரிவில் மனிதவளத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அமெரிக்கா கனடா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய பகுதிகளில் உள்ள அமேசான் வெப் சர்வீஸில் உள்ள ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்கள் அமைப்பு மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என்றும் உலக அளவில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்றும் குறிப்பாக அமெரிக்கா கனடா மற்றும் கோஸ்டாரிகாவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நீக்கப்படுவார்கள் என்றும் ஆடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 9000  ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 18000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அமேசான் நிறுவனத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

layoff1வேலை நீக்கம் செய்யப்பட்ட நபரின் தாக்கத்தையும் அவர்களுடைய குடும்பத்தையும் தாக்கத்தையும் நான் முழுமையாக உணர்கிறேன், பாதிக்கப்பட்ட அனைவரையும் மரியாதை உடன் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். விடை பெறும் ஊழியர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் செய்த மிகப்பெரிய பணிக்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருவதால் வேலையில்லா திண்டாட்டம் பல நாடுகளில் பெருகி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.