புதுவை மாநிலத்தில் பெண் அரசு ஊழியர்கள் தற்போது ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக புதுவையில் உள்ள பெண் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு வீட்டில் அதிகம் வேலை இருக்கும் என்ற காரணத்தினால் அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டு அலுவலகம் செல்வது என்பது கடினமான காரியமாக இருந்து வருகிறது. இதை கணக்கில் கொண்டு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் அரசு அலுவலகத்திற்கு வருவதற்கு நேர சலுகை வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டதை அடுத்து இது குறித்த கோப்பில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார். இதனை அடுத்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெண் அரசு ஊழியர்கள் காலை 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு வேலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணாக தனக்கு இந்த கஷ்டம் தெரியும் என்றும் இந்த கோரிக்கையை முதலமைச்சர் இடம் நான் விடுத்தேன் என்றும் அதற்கு அவர் ஒத்துக் கொண்டதற்கு நன்றி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர வெள்ளிக்கிழமை சலுகை அளிக்கப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சலுகையை தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.