மருத்துவம் சார்ந்த 4,133 பணியிடங்கள் காலி: அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு..!

By Bala Siva

Published:

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 4133 காலியிடங்களுக்கு விரைவில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் மட்டும் 4,133 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணியிடங்களை தேர்வாணைய மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இன்று அமைச்சர் சட்டசபையில் கூறிய முக்கிய விவரங்கள் பின் வருமாறு:

அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்படும்.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்க இருதய பாதுகாப்பு மருந்துகள் ரூ.3.37 கோடியில் வழங்கப்படும்.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.64.90 கோடியில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.53 கோடியில் அமைக்கப்படும்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35.15 கோடியில் செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் அமைக்கப்படும்.

200 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ரூ.80 கோடியில் கட்டப்படும்

அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் வழங்கிடுவதற்கு ஏதுவாக CT, MRI ஸ்கேன் உட்பட அதிநவீன உயிர்காக்கும் உயர்ரக மருத்துவ உபகரணங்கள் ரூ.298.95 கோடியில் வழங்கப்படும்.

நோய்களைக் கண்டறியும் ஆய்வகப் பரிசோதனைகள் எளிய முறையில் கிடைத்திடும் வகையில் ஒருங்கிணைந்த ஆய்வக கட்டமைப்புகள், நுகர்பொருட்கள் மற்றும் ஆய்வகக் கருவிகள் ரூ.304.12 கோடியில் வழங்கப்படும்.

62 புதிய 108 அவசர கால ஊர்திகள், 13 தாய்சேய் நல ஊர்திகள் மற்றும் 92 நவீன மருத்துவக் கருவிகள் ரூ.21.40 கோடியில் வழங்கப்படும்.

மகப்பேறு, குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் நலனுக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவுகள் ஆகிய “தாய்-சேய் நல சேவைகள்” ரூ.43.41 கோடியில் மாநில அளவில் மேம்படுத்தப்படும்.

சமூக அளவில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.3.31 கோடியில் செயல்படுத்தப்படும்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கான “முழு உடல் பரிசோதனை” மற்றும் “சிறப்பு முகாம்கள்” நடத்தப்படும்.

தூய்மைப் பணியாளர்களின் பணியிட நலன்கருதி, “தனி அறை” அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அமைத்துத் தரப்படும்.

போதை மீட்பு சேவைகள் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, உரிய மனநல ஆலோசனை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் கிடைத்திடும் வகையில் ரூ.5.23 கோடியில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்துகளை காலதாமதமின்றி வழங்கி உயிரிழப்பினைத் தடுத்திட ரூ.3.37 கோடியில் மருந்துகள் வழங்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப்படும்.