பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்த்திரை உலகம் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியது. இதில் கலந்து கொண்டு வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள் இவை.
பரமக்குடி தந்த பத்தரமாத்து தங்கம். பத்மஸ்ரீ என் அன்பு அண்ணன் கமல் இன்று 60 ஆண்டுகாலம் திரைத்துறையில் பயணம் செய்ததற்கு இங்கு பாராட்டு நடக்குது. நான் தரையில உட்கார்ந்து திரையில அண்ணன பார்த்தேன். அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. சிங்காரவேலன் என்ற படத்துல அந்த வாய்ப்பு கிடைச்சது. அந்த வாய்ப்பைக் கொடுத்தது அருமை அண்ணன் ஆர்.வி.உதயகுமார்.
அஞ்சு வயசு… சாரி… பிஞ்சு வயசுல எதுவுமே தெரியாம இந்தத் திரையுலகத்துக்கு வந்து, அம்மா, அப்பாவைக் கூட எப்படி கூப்பிடணும்னு ரொம்ப அழகா அவரு வாயால சொன்னாரு. அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே… அப்படி சொல்றப்ப தான் அம்மா, அப்பா மேல மரியாதை எங்களை மாதிரி சின்னப்பசங்களுக்கு ரொம்ப அதிகமாச்சு.
அஞ்சு வயசுல இருந்து இன்னிக்கு 60 வருஷம் திரைஉலகத்துல கடந்து வந்துருக்காங்கன்னா… கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி வைக்கிற திரை உலகத்துல… ஏ… யப்பா… திக்கு திக்கு திக்குங்குது. எப்படி இந்த அறுபது வருஷம் இவரு ட்ராவல் பண்ணினாருங்கறதே தெரில.
என்னை மாரி ஆளுக்கே கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னிவெடியா வைக்கிறான்… இவருக்கு எத்தனை ஏவல்கள் விட்ருப்பாங்க. எத்தனை பாம் வச்சிருப்பாங்க. தவ்வுற இடத்துல தவ்வுறது… முங்குற இடத்துல முங்குறது… பறக்குற இடத்துல பறக்குறது… மறையுற இடத்துல மறையுறது… எல்லா வித்தையும் கத்துட்டு.. இன்னைக்கு இங்க நிக்கிறாருன்னா, இவரை மாதிரி இன்னைக்கு ஒரு உதாரணமே கிடையாது.
நான் ராஜ்கிரண் சார் படத்தின் மூலமா திரையுலகத்துக்கு வந்தேன். அடுத்து 2 படங்கள் இவரு கூட நடிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.
ஆர்.வி.உதயகுமார் வாய்ப்பு கொடுத்தாரு… சிங்கார வேலன். அந்தப் படத்துல நடிக்கும்போது என் தோள்ல கை போட்டு கமல் சார், வடிவேலு இங்க வா. எந்த ஊரு வடிவேலு நீயி.. உனக்கு என்ன தெரியும்? அப்படின்னு கேட்டாரு. சும்மா அப்படியே பாடுவேன் சார். சும்மா அப்படியே தெருவுல டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பேன். சின்னப் புள்ளைல இருந்து நிறைய பாட்டுப் பாடுவேன்.
ஆடுவேன் சார். அப்படியா… சரி சரி… சரி… சரி.. நீ ஒண்ணு செய்யி. ராஜ்கமல் பிலிம்ஸ்..னு என் கம்பெனி பேரு. நாளை காலைல விடிஞ்ச உடனே அங்கே போயி டிஎன்எஸ்னு ஒருத்தர் இருப்பாரு. அவரு அட்வான்ஸ் தருவாரு. போயி வாங்கிக்க. அடுத்த படம்… என் படத்துல நீ நடிக்க. தேவர்மகன்னாரு. ரொம்ப நன்றி சார். இவரைப் பார்க்கறதே பெரிய விஷயம். இவரைப் பார்த்துக்கிட்டே நிப்பேன் சிங்காரவேலன்ல.
பார்த்த அடுத்த நிமிஷமே எனக்கு அவரு படத்துல நடிக்கறதுக்கு வாய்ப்பு கொடுத்தாரு. காலைல எதுக்குப் போகணும்… நமக்கு சரிவராது. இங்க கேப்பு கெடைச்சா உள்ளே பூந்துருவாங்க.
ஆத்தாடி சரிவராதுடான்னு… சூட்டிங் முடிஞ்சி சாய்ங்காலம் 6 மணிக்கெல்லாம் இங்கேருந்து நேரா ராஜ்கமல் பிலிம்ஸ்சுக்குப் போயிட்டேன்.
அங்க ஒருத்தர் கண்ணாடி போட்டு நிக்கிறாரு.. டிஎன்எஸ். யாரு.. அவரு கொஞ்சம் ஷார்ப்பாத் தான் பேசுவாரு. ஐயா நானு சிங்காரவேலன் படத்துல கமல் சார் கூட ஆக்ட் பண்றேன். என் பேரு வடிவேலு. காலைல தான உன்னைய வரச்சொன்னாரு. இல்ல.. அது வரைக்கும் நான் தாங்க மாட்டேன் சார்.. நைட்டோட நைட்டா… ஆ…ங்.. அப்படியா, கொஞ்சம் நில்லுங்கன்னு உள்ளே போயி ஒரு போன் சாருக்கு. சார் வந்து அங்க இருக்காரு.
சரி வாங்க. பர்ஸ்ட் எனக்கு இந்தப் படத்துல 5000 ரூவா அட்வான்ஸ் செக் கொடுத்தாங்க. மறுநாள் சிங்காரவேலன்ல விஜிபி கிட்ட சூட்டிங். என்ன வடிவேலு விடிஞ்சதும் தான உன்னைப் போச்சொன்னேன். நேத்து நைட்டே போயிட்டப் போல இருக்கு…ன்னாரு. சார் எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிடுச்சி சார் அப்படின்னேன். காலைல வர்ற விடியல் வேற. எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிடுச்சு..!