ஒரே கல்லில் 2 மாங்காய் என்பார்கள். அந்த வகையில் ஒரே கட்டுரையில் 2 கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம். தம்பதி சமேதராக இருக்கும் கோவில்கள் வெகு குறைவு. அந்த வகையில் ஒரு தலம் பற்றியும், அடுத்ததாக பெண் பாவத்தைப் போக்கக்கூடிய தலத்தைப் பற்றியும் பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியிலுள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பெரும்பான்மையான தெய்வங்கள், தம்பதி சமேதராக காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பு.
தம்பதி சமேதராக காட்சி
மூலவர் பள்ளி கொண்ட ஈஸ்வரன்-சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர்-மரகதாம்பிகை, விநாயகர்-சித்தி, புத்தி, சாஸ்தா-பூரணை, புஷ்கலை, குபேரன்-கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்.
இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சி. இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சாபம் போக்கும் தலம்
பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். அதனால் நாம் அறிந்தோ அறியாமலோ பெண்களுக்கு ஏதாவது தீங்கு இழைத்தால் சாபம் உண்டாகி பல இன்னல்களுக்கு ஆளாக நேரும். அத்தகையோர் தங்கள் பாவத்திலிருந்து விடுபட என்று ஒரு திருத்தலம் உள்ளது. இந்தத் தலத்தில் இன்னும் பல அதிசயங்கள் உள்ளன. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவீசநல்லூர் திருத்தலம் உள்ளது. இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர்.
இறைவி சவுந்திரநாயகி. பெண் பாவம் போக்கும் தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவீசநல்லூர்.
பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம், பாவம் நீங்கும்.
நான்கு யுக பைரவர்கள்
இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.