பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

By Sankar Velu

Published:

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். இது இருந்தால் தான் நாம் உலகைக் காண முடியும். பல்வேறு தகவல்களையும் பெறுவது இந்தக் கண் தான். கண்தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். அதனால் தான் பலரும் இறக்கும் முன்பே கண்தானம், உடல் தானம் என்று செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம் வெள்ளீஸ்வரர் குடியிருக்கும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தானத்தைத் தடுத்த முனிவர்

Mankadu Kamatchi Amman 1
Mankadu Kamatchi Amman

தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன.

சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார். இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடும் தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவர்.

திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார். அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல. மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் கொடுக்காதே என்று கூறுகிறார்.

பார்வையை இழந்தார்

வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன் என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முயற்சித்தார். அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.

வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வை இழந்து விட்டது.

தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு திருமால் இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னியை வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

சிவனின் அருள்

நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கைலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

Velleeswarar
Velleeswarar

வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். மேலும் அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஈசன் அருள்புரிந்து சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியது. அதனால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்பது ஐதீகம்.

சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையொட்டி வெள்ளீசுவரர் என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம்.