உலகில் மனிதர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. ஜீவராசிகளுக்கிடையேயும் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பதில் தான் குறியாய் இருக்கின்றனர். ஆனால் ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த ஆலயம். அது எங்குள்ளது? எப்படிப்பட்ட ஆலயம் என்று பார்க்கலாமா…
தனிச்சிறப்பு
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்திருக்கும் இந்த கோவிலை திருக்கூடுதுறை என்றும் அழைப்பர். இந்த ஆற்றில் காவேரி, பவானி, மற்றும் ஆகாய கங்கை எனும் அமுத நதி மூன்றும் சங்கமிக்கிறது. இதுதான் இந்த கோவிலின் தனிச்சிறப்பு. நம் சங்க இலக்கியங்களில் இந்த பகுதியை திருநாணா என்று புகழ்ந்து பாடியுள்ளனர்.
இந்த இடத்திற்கு தக்ஷிண திரிவேணி சங்கமம் மற்றும் கூடுதுறை என்ற பெயர்களும் உண்டு. இந்த பெயர்கள் அனைத்தும் இங்கே கூடுகிற மூன்று நதிகளை குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. மக்கள் தங்களின் முன்னோர் மற்றும் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இந்த நதியில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தல வரலாறு
ஒருமுறை விஸ்ரவரின் மகனான குபேரருக்கு அவர் பக்தியின் பயனாய் ஒரு வானூர்தி கிடைத்தது. இதன் மூலம் எல்லா திசைகளிலும் இருக்கும் சிவாலயங்களை அவர் தரிசித்து வந்தார். ஒருமுறை அவர் காவேரி நதிக்கரையின் மீது பறந்து கொண்டிருந்த போது ஒரு அதிசயத்தைக் கண்டார்.
மான், புலி, பசு, யானை, பாம்பு, எலி என அனைத்து ஜீவராசியும் எந்தவித எதிரி என்ற நினைப்பும் இல்லாமல் மிக தைரியமாக ஒன்றாக சேர்ந்து ஒரு இலந்தை மரத்தின் அடியில் நீர் அருந்தி கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிசயத்த குபேரருக்கு பதிலளிக்கும் விதமாக அசரீரி ஒன்று ஒலித்தது. இந்த இடம் மிக புனிதமான இடம். வேதங்கள் அனைத்தும் இங்கே வந்து இறைவனை வழிபட்டுள்ளது. கந்தர்வர்களால் சூழப்பட்டது.
எனவே, இங்கே இலந்தை மரத்தின் அடியில் இருக்கும் சிவபெருமானை வணங்குவது மிகுந்த சிறப்பை தரும் என்ற அசரீரியைக் கேட்டு மெய் சிலிர்த்தார். இந்த இலந்தை மரம் அனைத்து தட்பவெட்ப காலங்களில் கனி கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்துகிறது. இன்றும் இந்த மரம் கொடுக்கும் கனியை பூஜைக்கு பயன்படுத்துகின்றனர்.
இங்கிருக்கும் சங்கமேஸ்வரரை குபேரர், விஸ்வாமித்ரர், பரசரர் அனைவரும் வணங்கி வழிப்பட்டுள்ளனர். சிதம்பரம் கோவிலுக்கும் சங்கமேஸ்வரர் ஆலயத்திற்கும் தொடர்பு இருந்தது என்ற நம்பிக்கை உண்டு. சேர சோழ பாண்டிய காலத்தில் இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டதே இதற்கு சான்றாகவும் சொல்லப்படுகிறது. இது தேவார பாடல் பெற்ற தலம்.
இந்தக் கோவிலில் மூலவராக சங்கமேஸ்வரரும், தாயாராக வேதநாயகி, சங்கமேஸ்வரி, பவானி உள்ளிட்டோரும் உள்ளனர். தலவிருட்சமாக இலந்தை மரம் உள்ளது. இங்கு காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தங்களும் உள்ளன.
விழாக்கள்
ஆடி 18ம் பெருக்கு, சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி. சித்திரையில் 13 நாள்கள் விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
கோவையிலிருந்து 106 கி.மீ தொலைவிலும் சேலத்திலிருந்து 56 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் ஆலயம். ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.