ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் எப்போதுமே மனிதராகிய அனைவருக்கும் வந்து போவதுண்டு. இவை தான் இறைவனிடம் நம்மை அண்டவிடாமல் செய்பவை.
இவற்றிலிருந்து நாம் விடுபட ஒரே வழி இறைவனை சரணாகதி அடைவது தான். அதைப் பற்றி இன்றைய மார்கழி 21 (5.1.2023) வியாழக்கிழமை திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
போற்றி என் வாழ்முதலாகிய பொருளே என்கிறார். இறைவன் நடுநாயகமாக இருந்து அருள்புரியக்கூடிய உன்னை நான் போற்றிப் பாடுகிறேன். இன்பமும், துன்பமும் நமக்கு நிரந்தரமல்ல. இன்பம் அல்லாதவற்றை எல்லாம் நாம் இன்பம் என்று நினைத்து மயங்கக்கூடாது.
பேரின்பத்தைத் தரக்கூடிய இன்பத்தைத் தான் நாம் போற்ற வேண்டும். இறைவன் பேரின்பத்திற்கு உரியவர். இன்பத்திற்கும், துன்ப நீக்கத்திற்கும் நிறைய பேருக்கு வேறுபாடு தெரிவதில்லை.
வெயிலில் அலைந்து திரிந்தவருக்கு ஏ.சி. ரூம் இன்பமாக இருக்கும். அப்படின்னா குளுகுளுன்னு பனியில் இருக்காங்களே அவங்களுக்கு எல்லாம் இன்பமா? இல்லை.
ஒரு பிரச்சனை வந்து அது நீங்கியது என்றால் அது இன்பம் அல்ல. துன்பநீக்கம். வீடு, மனைவி மக்கள், பொருள்கள் இவை எல்லாம் இன்பம்னு நினைக்கிறோம். ஆனால் இதெல்லாம் நிரந்தரமல்ல. இறைவனைப் பற்றி பேசுவதும், வணங்குவதும், அவரது பெருங்கருணையைப் பெறுவதும் தான் இன்பம். மலர்ந்த முகத்தோடு நாங்கள் எல்லோரும் உன் திருவடியை வணங்க வந்துள்ளோம்.
சேற்றிலே அழகான தாமரை மலர்கள் பூத்துக்கிடக்கிறது. அந்த அற்புதமான நீர்த்துறை நிறைந்துள்ள திருப்பெருந்துறையுறை சிவனே நீ துயில் எழுந்து அருள்புரிவாய் என்று மாணிக்கவாசகர் வேண்டுகிறார். ஆனால் துயில் எழ வேண்டியது நாம் தான். மாயத் துயிலில் இருந்து எழுந்து வந்து இறைவனின் திருவடியைப் பெற வேண்டும் என்று நம்மை மகிழ்ச்சியோடு அழைக்கிறார் மாணிக்கவாசகர்.
ஆண்டாள் இன்றைய திருப்பாவைப் பாடலில் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப என்று தொடங்குகிறார்.
இந்தப்பாடலில் நாச்சியார் அங்கிருக்கக்கூடிய பசுக்களின் வளமை, நாட்டின் சிறப்புகளைப் பற்றியும் சொல்கிறார். யாராவது தஞ்சம் என்று உன் திருவடியில் வந்து விட்டால் சரணடைந்த அந்த அடியார்களுக்காக எந்தவிதமான செயலையும் செய்து அவரைக் காக்கும் பெருமானே..என்கிறார் ஆண்டாள்.
அதைத் தான் ஆற்றாது வந்து அடிபோயும் ஆப்போலே என்கிறார். அதுபோல நாங்களும் உன்னை சரணாகதி அடைகிறோம். என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். கடைசியில் ஆத்மாக்கள் அனைத்தும் செய்யக்கூடிய வேலையே இதுதான். நானாகவே எல்லாம் செய்வேன் என்ற ஆணவம் இருக்கக்கூடாது.
இறைவனிடம் சரணாகதி அடைவது அற்புதமான விஷயம். இதற்கு நல்ல ஒரு உதாரணம் மகாபாரதம். அதிலும் பாஞ்சாலி என்ற திரௌபதியின் துகில் உரிதல் சம்பவத்தைச் சொல்லலாம். துரியோதனன், தருமர் இருவரும் சூதாடுகின்றனர். ஒவ்வொரு பொருளாக வைத்து சூதாடுகின்றனர்.
தருமருக்கு வெற்றியே கிடைக்கவில்லை. அனைத்தையும் இழக்கின்றார். கடைசியில் அவர்களும் அடிமையாகினர். திரௌபதியை வைத்து ஆடுகிறார். தனது மனைவியையே பந்தயப் பொருளாக வைக்கின்றனர். எல்லாவற்றுக்கும் சகுனியே காரணமாக இருக்கிறார். யாரும் செய்யத்துணியாத காரியத்தை செய்த தருமர் தனது மனைவியையும் சூதாட்டத்தில் இழக்கின்றார்.
பாஞ்சாலியோ தனது கணவன்மார்கள் இருக்கிறார்கள். தனக்கு எவ்வித துன்பமும் வராது என்று நிம்மதியாக இருக்கிறார். ஆனால் இந்த நிலை வரும் என அவருக்குத் தெரியாது. துச்சாதனன் துகில் உரிகிறான். அப்போதும் அவள் தன்னைக் காப்பாற்றவே முற்படுகிறார். இறைவனை சரணாகதி அடையவில்லை.
கடைசியில் துகில் உரிந்து முடிக்கும் நேரம் தான் அவருக்கு இறைவனை சரணாகதி அடைய வேண்டும் என்று தோன்றுகிறது. இரண்டு கைகளையும் விட்டுவிட்டார். இறைவன் அவருக்கு லட்சோபலட்சம் சேலைகளை வாரி வழங்குகிறார். அதனால் கடைசியில் சரணாகதி அடைவதை இப்பவே அடைந்து விடுவதே சாலச்சிறந்தது என்றே இந்தக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.
இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களேக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உன்னுடைய திருவடியை சரணாகதி அடையாமல் எதுவும் நடக்காது என்று ஆண்டாள் இந்தப்பாடலில் சொல்கிறார்.