உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நள்ளிரவு நடந்த அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷிய அணிகள் மோதிய நிலையில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று மதியம் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் வரும் 18ஆம் தேதி சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடையும் நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி 2026ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கத்தார் என்ற ஒரே ஒரு நாடு மட்டுமே உலக கோப்பையை நடத்தி வரும் நிலையில் அடுத்த உலக கோப்பை மூன்று நாடுகள் சேர்ந்து நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா நடத்திய நிலையில் தற்போது மீண்டும் அந்த நாட்டுக்கு உலகக்கோப்பையை நடத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மெக்சிகோ கடந்த 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியிஐ நடத்தி உள்ளது என்பதும் கனடாவுக்கு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதுவே முதல் முறை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டில் தென் கொரியா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து உலக கோப்பை போட்டியை நடத்திய நிலையில் முதல் முறையாக உலககோப்பையை மூன்று நாடுகள் இணைந்து நடத்த உள்ளதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 11 முக்கிய நகரங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த மைதானங்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாகவும், நவீன வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் உள்ள கால்பந்து மைதானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.