சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
சஷ்டி விரதம் என்றால் மாதாமாதம் வரக்கூடிய திதி நாளா அல்லது ஐப்பசி மாதம் தீபாவளியன்று வரும் கந்த சஷ்டியா?
ஐப்பசி மாத கந்த சஷ்டியின்போது விரதம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஐப்பசி வரை காத்திருக்காமல் ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
முருகன் அருளால் கர்ப்பப்பையில் கரு வளர, உடனே அந்த விரதத்தை மேற்கொள்வதும் சரிதானே?
சூரபத்மன் மிகக் கொடுமையான ஓர் அரக்கன். மூவுலகத்தோரையும் மிரட்டி, உருட்டி, அதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தான். அவனுக்கு பயந்து ஒதுங்கிப் பணிந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து அப்படி பணிந்து கொண்டேயிருக்க, அவர்களுடைய பலவீனத்தைத் தன்னோட வெற்றியாக நினைத்து குரூரமாக சந்தோஷப்பட்டான் சூரபத்மன். அதனால் தொடர்ந்து மேலும் மேலும் அவர்களைத் துன்புறுத்தி மகிழ்ந்தான்.
அவனுடைய அக்கிரமத்தையும், அதனால் அவன் அடையும் அல்ப சந்தோஷத்தையும் பார்த்த பிற அரக்கர்கள், தாமும் ஏன் அவனைப் போலவே நடந்துகொள்ளக் கூடாது என்று யோசித்து அவர்களும் எதிர்ப்பட்ட முனிவர்களையும், பொது மக்களையும் கொடுமைப்படுத்தினர்.
அப்படி அடிமைப்படுத்தப் பட்டவர்களில் ஒருவன் ஜயந்தன். இவன் இந்திரனுடைய மகன். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் மகனையே அரக்கர்கள் சிறைப்பிடித்துப் போனது கொடுமையின் உச்சம்.
அதோடு இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரட்ட, அவள், சூரபத்மனுக்கு பயந்து எங்கேயோ போய் ஒளிந்துகொண்டாள். தேவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தித் தன் சர்வாதிகார சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான் சூரபத்மன்.
அவன் செய்வதை தப்புன்னு சொல்றதுக்கோ, அவனை எதிர்ப்பதற்கோ யாருக்கும் தைரியமில்லை. அப்பாவிகளின் துயரத்தைப் போக்க வேல் முருகன் முன்வந்தார். அவன் தன் தவறுக்கு வருந்துகிறானா என்பதை அறிய, தன்னுடைய தளபதி வீரபாகுவை அவனிடம் தூது அனுப்பினார்.
சூரபத்மன் பிடித்து வைத்திருப்பவர்களை எல்லாம் அவன் விடுதலை செய்தானானால் சமாதானமாகப் போய்விடலாம் என்று சொல்லி அனுப்பினார்.
ஆனால், சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்போன வீரபாகுவை சூரபத்மனுடைய ஆட்கள் தடுத்தார்கள். அவன் சொல்ல வந்தது எதையும் கேட்காமல், அவனைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
ஆகவே தன்னைக் காத்துக் கொள்வதற்கும், சூரபத்மனிடம் நேரடியாக முருகன் சொல்லியனுப்பிய தகவலைச் சொல்வதற்கும் இடையூறாக இருந்த அரக்கர்கள் சிலரை அவன் திருப்பித்தாக்க வேண்டியதாயிற்று.
அதனால், பல அரக்கர்கள் மடிந்தனர். ஆனால், சூரபத்மன் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. யாரையும் விடுவிக்க முடியாது, மன்னிப்பும் கேட்கமுடியாது என்று இறுமாப்பாகச் சொல்லிவிட்டான். ஜயந்தன் மட்டுமல்ல, இந்திரன், இந்திராணி இருவரையும் விரைவில் சிறைபிடிப்பேன் என்றும் கொக்கரித்தான்.
சாத்வீகமாகப் போனால் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட வீரபாகு, முருகனிடம் வந்து விவரம் சொன்னார்.

இனிமேலும் பொறுப்பதில்லை என்று முருகன் தீர்மானித்தார். தன் வீரர்களை அழைத்துக்கொண்டு சூரபத்மனை பந்தாடப் போனார். ஆனால், முருகனைப் பார்த்தால் சண்டை போடும் குணமுடையவனாகவே தெரியமாட்டார். அழகான குழந்தை முகம், சாந்தமான அழகான புன்னகை. இந்த மலருக்கும் கோபம் வருமா என்றுதான் பார்ப்போருக்குத் தோன்றும்.
அக்கிரமங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக்கொண்டே போகும்போது பூக்களும் புயலாவதுதானே வழக்கம்? ஆனால், சூரபத்மனும், அவனைச் சேர்ந்தவர்களும் முருகனை ஒன்றும் தெரியாத பாலகன் என்றுதான் தவறாக மதிப்பிட்டார்கள்.
ஆனால், அவர்களுடைய நினைப்பெல்லாம் தவிடுபொடியாவது போல துர்க்குணன், தருமகோபன், சண்டன் ஆகிய அரக்கர்களையும், சூரபத்மனுடைய பிள்ளைகளான பானுகோபன், இரணியன் ஆகியோரையும், அவனுடைய தம்பிகளான அக்கினி முகன், சிங்கமுகாசுரன் என்று எல்லோரையும் முருகன் பந்தாடிக் கொன்றார்.
தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்தும் சூரபத்மனுக்கு முருகனின் பராக்கிரமம் புரியவில்லை.
இன்னும் கோபம் அதிகமாயிற்று. முருகனைப் பார்த்து அலட்சியமாக சிரித்தான். இந்தப் பொடியனோடு சண்டை போடுவது தன்னுடைய பராக்கிரமத்துக்கே இழுக்கு என்று கர்வப்பட்டான்.
ஆனால், போகப்போக குமரனுடைய ஆற்றலைப் பார்த்த சூரபத்மன் திகைத்தான். அவரை எதிர்ப்பது தனக்குப் பேராபத்தாகத்தான் முடியும் என்பதை உணர்ந்த அவன் உடனே மாயமாக மறைந்துவிட்டான்.

தனக்குக் கிடைத்திருந்த அபூர்வ சக்தியால் யார் கண்ணிற்கும் தெரியாதபடி மறைந்தபடி போரிட்டான் அவன். ஆனால், எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி மாயப்போர் புரிய முடியும்?
சக்கரவாகப்பட்சியாக, பெரிய பூமி உருண்டையாக, மும்மூர்த்திகளாக, தேவர்களாக, அசுரர்களாக, கூற்றுவனாக, இறந்த தன் பிள்ளைகள், தம்பிகள் என்று பலவாறாக மாய உருவம் கொண்டு முருகனை எதிர்த்தான். ஆனாலும் புன்னகை மாறாமல் அப்படி புதிது புதிதாகத் தோன்றிய சூரபத்மனுடைய எல்லா உருவங்களையும் அழித்து ஒழித்தான்.
இறுதியாக சூரபத்மன் மாமரமாக மாறி கடலிலிருந்து பிரமாண்டமாக எழுந்து, முருகவேலை எதிர்த்தான். அவனை தன் முயற்சிகளால் மட்டும் வெல்ல முடியாது என்று தோன்றியது முருகனுக்கு. உடனே, (இப்போதைய நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள) சிக்கல் என்ற தலத்துக்குப் போய் அங்கே கோயில் கொண்டிருந்த தன் தாயான அம்பிகையிடமிருந்து ஒரு வேலை வாங்கி வந்தார்.

இன்றைக்கும் சிக்கல் தலத்தில் உற்சவத்தின்போது, தாயிடமிருந்து வேல்வாங்கும் முருகன் விக்கிரகத்தின் முகத்தில் வியர்வை அரும்புவதைப் பரவசத்துடன் காணலாம்! அந்த சூரசம்ஹார உற்சவத்தின்போது அப்படி முருகன் விக்கிரகத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வையைத் துடைத்து விடுவதற்கென்றே ஒரு அர்ச்சகர் துணியோட காத்திருப்பார்!

தாயாரிடமிருந்து வாங்கி வந்த சக்தி வேலை எடுத்து சூரபத்மனை நோக்கி எறிந்தார் முருகன். அது அசுரனை நேரடியாகத் தாக்கி அவனை இருகூறுகளாகப் பிளந்தது. மாய்ந்து வீழ்ந்தான் அரக்கன். ஆனால், அந்தக் கொடிய அரக்கனுக்கும் நற்கதி தந்தார், முருகன்.
மாமரமாகத் தோன்றிய அவனை இருகூறுகளாகப் பிளந்து, அவற்றில் ஒன்றைத் தன் சேவற்கொடியாகவும், இன்னொன்றை மயில் வாகனமாகவும் மாற்றித் தன்னுடனேயே இருத்திக் கொண்டார்.
பொதுவாகவே இந்த சூரசம்ஹார வைபவம் உலகத்திலுள்ள முருகன் கோயில்களிலும் கொண்டாடப் படுகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



