வழிபாடுகளில் மிகவும் பழமையானது முருகன் வழிபாடு தான். முருகன், அழகன், குமரன், குகன், கந்தன், சரவணன், கார்த்திகேயன், சண்முகன் என பல ஆயிரக்கணக்கான நாமங்களால் பக்தர்களால் அழைக்கப்பட்ட தெய்வம் தான் முருகன். இவரை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
கருங்கல் விக்கிரகம், பஞ்சலோகம், படங்கள், வள்ளி தெய்வானை, ராஜ அலங்காரம் என படங்கள் வைத்து வழிபடலாம். தம்பதி சமேதரா இருக்கும் படங்களும், மயில் மேல் முருகன் படங்களும் சிறப்பானது. வேல் வைத்தால் அதன் மேல் எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும்.
ஓம் சரவணபவ என்பது உயரிய மந்திரம். இந்த நாமத்தை சொல்லி நாம் பாராயணம் பண்ணலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முகக்கவசம், பஞ்சாமிர்த வர்ணம், அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி என பல அற்புதமான பதிகங்கள் உள்ளன. இவற்றைப் படித்தும் முருகப்பெருமானை வழிபடலாம். இவற்றில் எது தெரியுமோ அதைப் பாராயணம் செய்யலாம்.
முருகப்பெருமானை வழிபட உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இவருக்கு செவ்வாய்க்கிரகத்துடன் இணைந்த தொடர்பு உண்டு. கார்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் விசேஷமானது. முருகனுக்கு உரிய சிறப்பு நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். தேனும் தினைமாவும் விசேஷம். மாம்பழம் சிறப்பான பலன் தரக்கூடியது. முருகன் என்றாலே பஞ்சாமிர்தத்தை அபிஷேகமாகவும், நைவேத்தியமாகவும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை தோறும் 9 செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். உயரிய பதவி கிடைக்க வேண்டும் என்றால் கார்த்திகை அன்று நாம் வழிபடலாம். பரணி இரவு விரதம் இருந்து கார்த்திகை முழுநாளும் உபவாசம் இருந்து மாலையில் முருகப்பெருமானின் ஆராதனைக்குப் பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சஷ்டி விரதம் இருக்கலாம். இது மாதம் தோறும் இரு தடவை வரும். அதாவது வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும். அப்போது விரதம் இருக்கலாம். குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும். மகா சஷ்டி என்பது ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பெரிய சஷ்டி.
பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை என முருகப்பெருமானுக்கு விசேஷ தினங்கள் பல உண்டு. இவற்றை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் திருவிழாக்களாகக் கொண்டாடுவர். கொடியேற்றி உற்சவமாகக் கொண்டாடுவதை நாம் பார்க்கலாம். இந்த நாள்களிலும் நாம் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கலாம்.
கடப்ப மலர், வெட்சி மலர், குறா மலர், வெண்தாமரை, செந்தாமரை ஆகிய மலர்கள் முருகனுக்கு உகந்தவை. வில்வம், மல்லிப்பூ, ஜாதிப்பூ, நந்தியா வட்டை, செண்பகம், மந்தாரை, முல்லை, மகிழம்பூ, காந்தமலர், கொன்றை மலர், செவ்வரளி, வெட்டிவேர் என பல மலர்கள் முருகப்பெருமானுக்கு உகந்தவை.
இவற்றைக் கொண்டு அர்ச்சித்து வழிபடலாம்.
குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று செவ்வரளியால் நாம் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண தடை, நீண்ட நாள்களாக இருந்து வரும் நோய், ரத்த சம்பந்தமான நோய் உள்ளவர்களும் இந்த செவ்வாய்க்கிழமை அன்று செவ்வரளி கொண்டு வழிபடலாம்.
6 மற்றும் 12ம் எண்கள் முருகனுக்கு விசேஷமானவை. தீபம் ஏற்றினாலும் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும். முருகப்பெருமானை நினைத்து அன்னதானம் பண்ணுகிறோம் என்றால் 6 பேருக்கு பண்ணலாம். 12 பேருக்கும் பண்ணலாம்.
அறுபடை வீடுகள், மருதமலை என பல திருத்தலங்கள் முருகப்பெருமானுக்குரியவை. குன்று இருக்கும் இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கிறார். குறிஞ்சி நிலக்கடவுள் முருகன் தான். இவருக்கு உலகம் முழுவதும் கோவில் உள்ளது.
நேர்த்திக்கடன் வழிபாடுகள் என்னவென்றால் மொட்டை போடுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்து வழிபாடு செய்தல், பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தல், அன்னதானம் செய்து வழிபடுதல் என பலவிதமான நேர்ச்சைகள் உண்டு. நேர்ச்சை என்றால் நேர்ந்து கொண்டு வழிபாடு செய்வது.
கடைக்கண் பார்வையால் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி வழங்குபவர் தான் முருகப்பெருமான். தற்போது கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அக்.30ம் தேதி சூரசம்ஹாரம். இதுவரை விரதம் இருக்காதவர்கள் கூட இப்போதே இருக்கலாம். ஒரு சக்திவாய்ந்த உணர்வுப்பூர்வமான உன்னத அனுபவத்திற்காகத் தயாராகுங்கள்.