முருகப்பெருமானை வழிபடக்கூடிய அற்புதமான விரத நாள்களில் அதிவிசேஷமானது கந்த சஷ்டி. இந்நன்னாளில் சூரசம்ஹாரமும் இணைந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்த விரதத்தை நாம் அனுசரித்து வந்தால் கேட்ட வரத்தை முருகப்பெருமான் நமக்கு தந்தருளுவார்.
குழந்தை பேறு, வியாபாரத்தில் லாபம், குடும்ப ஒற்றுமை, விரைவில் திருமணம், உயர் பதவி, குடும்பத்தில் ஒற்றுமை என பலவிதங்களில் நமக்கு நன்மைகள் கிடைக்க இந்த விரதத்தை நாம் அனுசரிக்கலாம்.
பிரதமையில் இருந்து தான் கந்த சஷ்டியைத் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம் இருப்பதால் நமக்கு கொஞ்சம் மாற்றம் உள்ளது. அன்று மாலையுடன் அமாவாசை நிறைவடைகிறது.
அதன்பிறகு பிரதமை தொடங்குகிறது. அதனால் 25ம் தேதி கந்த சஷ்டியைத் துவங்குகிற முதல் நாளாக கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். சூரசம்ஹாரம் அன்று சஷ்டி திதி இருக்க வேண்டும். அந்தக்காலத்தில் இருந்தே சஷ்டி திதியில் தான் சூரசம்ஹாரம் நடந்து வருகிறது.
7 நாள்களும் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையிலேயே காப்பு கட்டி விட வேண்டும். காலையில் 8.45க்குள் காப்பு கட்டி விட வேண்டும். திருச்செந்தூருக்குப் போயி காப்பு கட்டுறவங்க 24ம் தேதியே திருச்செந்தூர் போயிட்டு 25ம் தேதி காலையில் காப்பு கட்டி விட வேண்டும். அப்போதே விரதத்தைத் துவங்கி விட வேண்டும். அப்போது அமாவாசை தான் இருக்கும். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
வீட்டில் கலசம் வைத்துக் காப்பு கட்டுபவர்கள் 25ம் தேதி காலையிலேயே விரதத்தைத் துவங்கி விடலாம். சிலர் கேதார கௌரி நோன்பும் இருப்பாங்க. கந்த சஷ்டி விரதமும் இருப்பாங்க. அவங்க 24ம் தேதி கேதார கௌரி நோன்பை முடித்துவிட்டு 25ம் தேதி கந்த சஷ்டி விரதத்தை இருக்கலாம். நோன்பை காலை 12 மணிக்குள் முடித்து விட வேண்டும். விரதம் இருப்பவர்கள் கிரகணம் முடிந்ததும் குளித்து விடுவது அவசியம்.
மாலை 6.30க்குத் தான் கிரகணம் முடிகிறது. பின் குளித்து விட்டு 7 மணிக்கு மேல் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து விட்டு கங்கணம் கட்டிக்கொண்டு விரதத்தைத் தொடங்கலாம். மாலை சஷ்டி விரதம் இருந்து காப்பு கட்ட வேண்டிய நேரம் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை காப்பு கட்டிக் கொள்ளலாம்.
பக்கத்தில் இருக்கிற கோவிலில் போய் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். எல்லா கோவில்களிலும் கிரகணம் முடிந்து அபிஷேகம் செய்து சுத்தம் பண்ணி திரும்ப பூஜை ஆரம்பிக்கிறதுக்கு 7.30 மணி ஆகிவிடும். அதனால் இந்த நேரத்தில் கோவிலுக்கும் சென்று காப்பு கட்டிக்கொள்ளலாம்.
கிரகண நேரத்தில் நாம ஜெபம் என்பது கோடி கோடி நன்மை தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காப்பு கட்டாமலும் விரதம் இருக்கலாம். புதிதாக விரதம் இருப்பவர்களாக இருந்தால் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் கணவன் மனைவியுடன் சேர்ந்து விரதம் இருக்க வேண்டும்.
நோன்பு என்றால் உண்ணாமல் இருப்பது. 7 நாள்கள் இருப்பது முழுமையான விரதம். கடும் விரதம் இருப்பவர்கள் மிளகு விரதம். முதல் நாள் 1, இரண்டாம் நாள் 2….என 7 நாள்கள் 7 மிளகு மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
சிலர் இளநீர் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். சிலர் பாலும், பழமும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள். சிலர் கீரை வகைகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். சிலர் ஒருவேளை மட்டும் உணவை சாப்பிட்டு விரதம் இருப்பர். சிலர் காலை உணவைத் தவிர்த்து விட்டு மதியம், இரவு என இருவேளை சாப்பிட்டு விரதம் இருப்பர்.
இவற்றில் உங்கள் ஆரோக்கியத்தைப் பொருத்து எந்த விரதத்தையும் மேற்கொள்ளலாம். நம்பிக்கையுடன் விரதம் இருந்தால் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும் என்று சொல்வர். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் கடும் விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தைப் பேறு கிடைக்கும்.