இன்று (02.10.2022) சரஸ்வதியை வழிபடத் துவங்கும் முதல் நாள். கல்விக்கு உரிய கடவுளாக விளங்கக்கூடிய கடவுள் சரஸ்வதி தேவி.
நவராத்திரிக்குரிய ஒவ்வொரு 3 நாள்களும் ஒவ்வொரு அம்பிகைக்குரியதாக நாம் வழிபடுகிறோம். அந்த 3 நாள்களில் கலைகளுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குகிற கலைமகளைப் போற்றக்கூடிய திருநாளாக இந்த நாள் நமக்கு துவங்குகிறது.
எல்லாமே கலையின் வடிவம் தான். ஆய கலைகள் 64. சமைக்கறதுக்குக் கூட ஒரு வகை கலை தான். வீட்டை அழகா வைச்சிக்கிடுறது ஒரு வகையான கலை. பேச்சும், பாடலும், ஆடலும் கலையின் வடிவமே.
அனைத்துவிதமான கலைகளையும் நாம் குறைவறக் கற்று அதில் மிக கைதேர்ந்தவர்களாக நாம் வளர வேண்டும் என்றால் அதற்கு சரஸ்வதி தேவியின் அனுக்கிரகம் என்பது நமக்கு பரிபூரணமாகத் துணை செய்ய வேண்டும்.
பேச்சு என்பது பொதுவெளியில் மேடையில் பேசுவது போன்ற பேச்சாளர்கள் மட்டுமல்ல. சாதாரணமாக நம் வாழ்க்கையில் நல்ல முறையில் பேசக்கூடிய தன்மையையும் அந்த சரஸ்வதி தேவியே அருள்கிறாள். அதனால் எல்லோருக்கும் அவரோட அருள் வேண்டும்.
ஆனால் பலரும் என்ன நினைப்பாங்கன்னா சரஸ்வதி தேவின்னா பாட்டுப் பாடுறவங்க, டான்ஸ் ஆடுறவங்க, பக்க வாத்தியம்லாம் கத்துக்கிடறவங்க, படிக்கிறவங்க இவங்களுக்கு மட்டும் தான் அந்த நாள் விசேஷமானது.
இவங்க தான் சரஸ்வதி தேவியை வழிபடணும்கறது எல்லாம் கிடையாது. அனைவருமே கலைசார்ந்த ஏதாவது ஒரு தொழிலைத் தான் செய்து வருகிறோம்.
அதனால தான் இந்த கடைசி 3 நாள்கள் மிக மிக விசேஷமானது. அநேகமானோர் கடந்த 6 நாள்களும் எந்த ஒரு வழிபாடும் செய்ய முடியலைன்னா கூட மிச்சமிருக்கிற இந்த 3 நாள்களுமாவது நீங்கள் வழிபாடு செய்தாலே அத்தனை வழிபாடும் செய்த பலன் கிடைக்கும்.
இந்த 7வது நாளில் அகண்ட தீபத்தைத் தாராளமாக ஏற்றலாம். கலசம் வச்சி வழிபட வேண்டாம். தீபம் ஏற்றி தினமும் அம்பிகையின் படத்துக்கு ஆராதனை செய்யலாம். இத்தனை நாள் வழிபட முடியலையே என கவலைப்பட வேண்டாம். இன்று முதல் வழிபாட்டைத் துவங்குவதே விசேஷமானது தான்.
கலைமகள் எங்கு இருக்கிறாளோ அத்தனை நலன்களும் அவள் இருக்கிற இடத்தில் தானே வந்து சேரும்.
இன்று அம்பாளின் திருநாமம் சாம்பவி. சாம்பன் என்று சொல்லும் சிவபெருமானுக்கு மனைவியாக இருந்ததாலே அவளுக்கு சாம்பவி என்ற திருநாமம் அமையப்பெற்றது.
நவதுர்க்கையில் இன்று அம்பாளின் பெயர் காலராத்ரி. நவதுர்க்கையிலேயே உக்கிரமானவள் காலராத்ரி தான். நாம் வணங்கும் காளியின் சொரூபம் தான் காலராத்ரி.
காலா என்றால் கருப்பு என்று பொருள். நேரம் என்றும் பொருள்படும். கடைசி நேரத்தில் காலனாக வந்து அசுர வதம் புரிந்தவள். அதனால் இவளுக்கு காலராத்ரி என்று பெயர்.
தமிழில் நாம் காளி என்று சொல்கிறோம். காளி என்றால் பயங்கரமானவள். கரிய நிறத்தை உடைவள். காளி வந்து பயங்கரமான சொரூபம் என எண்ண வேண்டாம். அவள் அத்தனை அழகான சொரூபம். ஞான தேவதை. காளியின் தோற்றம் தான் பயங்கரமாக இருக்கிறதே தவிர அவளே ஞானத்தின் அதிபதி.
காளியை இன்று நவராத்திரியின் 7ம் நாளில் காலராத்ரி என்று அழைக்கிறோம். இந்த அசுர வதம் நடந்து கொண்டு இருக்கும் நாள்களில் அம்பிகை அழிப்பதற்கு ரத்த பீஜன் என்ற அரக்கனுக்கே மிகவும் பிரயத்தனம் எடுத்தாள். பீஜம் என்றால் விதை. ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுந்தால் கூட அதிலிருந்து ஒரு பீஜன் எழுவான்.
இப்படி ஆயிரமாயிரம் கோடி கோடி ரத்த பீஜன்கள் எழும்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்க. வெட்ட வெட்ட தெறிக்கும் ரத்தம் எல்லாம் பீஜனாக வளர வளர ஒரு கட்டத்தில் அம்பாள் என்ன நினைக்கிறாள் என்றால் அப்படியே வெட்ட வெட்ட தெறிக்கிற ரத்தத்தை எல்லாம் அம்பாள் அப்படியே உள்வாங்கிக் குடித்து விடுகிறாள்.
அதனால் மீண்டும் ரத்த பீஜன் வராமல் அவனை சம்ஹரிக்கிறாள். அவ்ளோ உக்கிரமானவள் தான் அம்பாள். அவ்ளோ உக்கிரமாகக் காட்சி தரக்காரணம் என்னன்னா உள்ளே போன அசுரனின் ரத்தம் தான். அசுரன் ஆடும் ஆட்டத்தை எல்லாம் காளி ஆடினாள். அதனால் தான் அந்த ஆட்டம் அவ்வளவு உக்கிரமாக இருக்கிறது.
காளி யாராலும் அடக்க முடியாத தேவியாக விண்ணை முட்டுகிற அளவு தனது சக்தியை அப்படியே பிரயத்தனப்படுத்தி அவ்வளவு ஆட்டத்தையும் ஆடி அந்தக் காளி அதன் பின் சாந்தமாகிறாள்.
காளியை கும்பிடுவதா என ஒரு அச்ச உணர்வு ஏற்படக்காரணமும் இந்த உக்கிரம் தான். ஆனால் அன்றைக்கு அந்த தேவி மகிஷாசுரனை வதம் செய்யாவிட்டால் அது நீண்டு கொண்டே போகும். அதனால் தான் சாந்தமாக இருந்த அம்பிகை அப்படியே உக்கிரமாக மாறி அந்த யுத்தத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் போர் புரிந்தாள்.
இத்தகைய சிறப்புக்குரியவள் தான் காலராத்ரி தேவி. இந்த அம்பிகையின் ரூபமே சற்று வித்தியாசமாக இருக்கும். கழுதை தான் இவரது வாகனம். நீளமான நாக்கு, நான்கு திருக்கரங்கள், அனைத்திலும் ஆயுதங்கள் என மிரட்டலாக இருப்பார்.
அம்பிகையின் பெயர் சாம்பவி. நவதுர்க்கையில் காலராத்ரி. தாழம்பூ, தும்பை மலர்களால் அர்ச்சிக்கலாம். எலுமிச்சை சாதம், பேரீச்சம்பழம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து பூஜிக்கலாம்.
பிலஹரி ராகத்தில் பாட்டுப் பாடி இளஞ்சிவப்பு நிற உடையணிந்து தேவியை வழிபடலாம்.
இந்த அம்பிகையை வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்தத் துர்சக்தியும் நம்மை அண்டாது. மனதில் உள்ள பயத்தையும், நடுக்கத்தையும் நீக்கித் தைரியத்தைத் தருபவள் இந்த காளி தான்.
மனவலிமை உண்டாகும். வீட்டில் சண்டை சச்சரவு, குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மன அமைதியும் உண்டாகும். அறியாமையை அழிக்கும் தெய்வமாகவும் காளி நாம் வேண்டும் வரத்தைத் தருபவளாக உள்ளதால் சுபம்காரியாகிறாள்.