நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவரா? அப்படின்னா இதை உங்களால் கேட்க முடியும்….!!!

By Sankar Velu

Published:

லலிதா சகஸ்ரநாமம் என்பது லலிதா தேவியின் ஆயிரம் பெயர்களைக் குறிக்கும் நூல். அவை துதிப்பாடல்களாக, ஸ்தோத்திரங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

இதை படிப்பதால் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியம், ஆன்மீகத்தின் விழிப்புணர்வு, மந்திரங்கள், தந்திரங்கள், ஞானம் என அனைத்தும் கிட்டும். பாவம் நீங்கும். பௌர்ணமி அன்று இதைப் படிக்கும்போது நோய்கள் நீங்கும்.

பூதங்கள், பிசாசுகளிடமிருந்து விலகுவீர்கள். இதைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாளாம். அப்பேர்ப்பட்ட மகிமை பொருந்தியது தான் இந்த லலிதா சகஸ்ரநாமம்.

லலிதா தேவியின் கட்டளைக்கு இணங்க எட்டு தேவிமார்கள் இந்த சகஸ்ரநாமத்தை இயற்றியுள்ளனர். வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஷ்வரி, மற்றும் கௌலினி என 8 தேவிமார்கள் உள்ளனர்.

உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம். இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை.

ஆன்மீகப் பாதை. மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன.

அந்த இந்து சனாதன தர்ம மதம் – 6 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸெளரம், காணாபத்தியம், கௌமாரம்.

இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது. அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு.

Lalitha Sahasranamam
Lalitha Sahasranamam

அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன. அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம். இதில் 5 வகைகள் உள்ளன.

லகு:

இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பல பேறுகள் பெறலாம். மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம்.

மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது. 10 ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன. அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ. அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.

லலிதம்:

லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.

லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் – சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல – அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.

லக்ஷணம்:

அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், 18 புராணங்களின் ஒன்று, ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான உரையாடல் வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.

லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது. இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

Lord Shiva 1
Lord Shiva

வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை. இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை.

லட்சியம்:

அம்பிகையிடம் – வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது சத்யபூர்வமான உண்மை. அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள்.

 

அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகி;றது. சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது.

பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகிறார். 1000 நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும்.

லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது.

அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.

லயம்:

லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வதால் என்ன என்ன கிடைக்கும் என்று தெரியுமா?

ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளும் கிடைக்கும். அது மட்டுமா… அம்பிகையோடு லயமாகிவிடுவீர்கள். அதாவது ஐக்கியமாகி விடும் மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

 

Leave a Comment