நவராத்திரியின் முதல் நாள் (26.09.2022) நவதுர்க்கையைப் பற்றி பார்ப்போம்.
நவராத்திரிக்கே உரிய தேவிகள் தான் நவதுர்க்கை. துர்க்கையின் உருவமாக சொல்லப்படுவது ஒன்பது அம்சங்கள். இதைத் தான் நவதுர்க்கை என்கிறோம்.
மகிஷாசுரனை வதம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது ஒரு சக்தியால் மட்டும் அவனை வதம் செய்ய முடியாது. எல்லா சக்திகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். முப்பெருந்தேவியரும் ஒன்றாக இணைந்து மும்மூர்த்திகளின் கருணையோடு அம்பாள் தவம் இருந்து மகிஷாசுரனை அழித்து வெற்றி கொண்டாடிய திருநாள் தான் இந்த நவராத்திரி.
அம்பிகை நவதுர்க்கைகளாகப் பிரிந்து நமக்கு அருள்புரியக்கூடிய ரூபங்களைத் தான் நாம் நவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
அறிவில் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு மனிதன் இந்த 9 நாள்களும் முறையாக விரதம் இருந்தால் அவன் ஒரு யோகியாக ஞானியாக மாறிவிடுவான். இப்படி எல்லா நிலையிலும் கடைநிலையில் உள்ள ஒருவன் உயர்நிலையைப் பெறக்கூடிய நிலையைத் தான் இந்த நவராத்திரி விரதம் நமக்கு தருகிறது.
கொலு எப்படி படிப்படியாக உயர்கிறதோ அதே போல் முதல் நிலையிலிருந்து உயர்நிலையை அடைகின்ற யோக தர்மங்களை நமக்கு விளக்கக்கூடிய ரூபங்களாக இந்த நவதுர்க்கை நமக்கு விளக்குகிறது.
முதல் நாளான இன்று இந்த அம்பிகைக்கு பெயர் சைல புத்ரி. இது வடமொழிச்சொல். சைலம் என்றால் மலை. புத்ரி என்றால் மகள். அதாவது மலைமகள்.
இதற்கு சரியான தமிழ்ப் பெயர் பார்வதி தேவி. பர்வதனின் மகளாகையால் இவளுக்கு பார்வதி என்றும் இமவானுடைய மகளானதால் இவளுக்கு ஹேமாவதி என்றும், பவானி என்ற திருநாமத்தையும் கொண்டவள் தான் பார்வதி தேவி.
முதல்நாளில் நாம் வழிபடும் தெய்வம் பார்வதி தேவி தான். கந்தபுராணத்தில் தாட்சாயணி என்ற வடிவம் எனக்கு வேண்டாம். நான் இன்னொரு பிறவி எடுத்து எனது ரூபத்தை அமைத்துக் கொள்கிறேன் என்று பர்வதனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை பார்வதி தேவியாக ரூபமெடுத்தாள். அப்போது இமவானாகிய பர்வதன் அம்பிகையை நோக்கி தவம் செய்கிறார்.
நீங்கள் எனக்கு மகளாக வர வேண்டும் என்று தவம் செய்கையில் அம்பாள் அவருக்கு மிக உயர்ந்த ஞானத்தைக் கொடுத்து நானே உங்கள் மகளாக அவதரிக்கிறேன் என்கிறார். அதே போல அம்பிகை அவருக்கு மகளாகப் பிறக்கிறார்.
ஏற்கனவே தட்சனுக்கு மகளாக வருகிறேன் என்று சொல்லியிருந்தார் பார்வதி. ஆனால் அவருக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை. அதனால் அவரும் தெய்வமே தனக்கு மகள் என்றும், உலகுக்கே தலைவனான சிவனே தனக்கு மாப்பிள்ளை என்றும் உணரவில்லை.
அதனால் தான் மகளையும், சிவனையும் அவர் எதிர்த்தார். அதனால் தான் தனது தந்தையாக வருபவருக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்தார். அதற்குப் பிறகு அவருக்கு மகளாக செல்கிறார் அம்பிகை. அப்படி சென்றவர் தான் பர்வத ராஜனுக்கு மகளாகப் பார்வதி தேவியாக பிறக்கிறாள்.
பார்வதிக்கு நந்தி வாகனம் உள்ளது. ஆயுதமாக கையில் திரிசூலம் ஏந்தி காட்சி தருகிறாள். இந்தக்காலகட்டங்களில் யோகக் கலையை நாம் பயிற்சி செய்தால் அதில் உயரிய நிலையை நிச்சயமாக அடையலாம். இன்று அம்பிகையின் பெயர் மகேஷ்வரி.
மலர்களில் மல்லிகையை வைத்து அர்ச்சிக்கலாம். வெண்பொங்கல், சுண்டல் வைத்து நைவேத்தியம் செய்யலாம். தோடி ராகத்தில் பாட்டுப் பாடி பச்சை நிற புடவையை நாமும் அணியலாம். அம்பிகைக்கும் அணிவிக்கலாம்.