புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை ரொம்பவே விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருகிறது. 24ம் தேதி இந்த மாதத்தில் முதல் சனிக்கிழமை வருகிறது. முதல் சனிக்கிழமை பீமன் என்கிற குயவன் தன்னிடம் உள்ள மண்ணைக் கொண்டு சீனிவாச பெருமாளை செய்து வழிபடுகிறார்.
பீமனுக்கு அவர் அனுக்கிரகம் செய்கிறார். அந்த பீமன் விரதம் இருந்து நலம் பெற்றது புரட்டாசி சனிக்கிழமை தான். அது தான் பின்னாளில் புரட்டாசி சனிக்கிழமையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னு பெருமாளுக்குத் தளிகை இட்டு பூஜை செய்கிறார்கள்.
அன்று வடக்கே கோவர்த்தன கிரி உற்சவம். இங்கு அன்னக்கூடை உற்சவம் என்று பெருமாளை வழிபட்டுக் கொண்டாடுகிறார்கள். கோவர்த்தன கிரியை கண்ணன் குடையாகப் பிடித்து நின்றார். ஆயர்கள் எல்லோரும் கண்ணனை வழிபடுவதால் இந்திரன் கோபம் கொண்டு மழையை வருவித்து மக்களைத் துன்பப்படுத்தினார்.
அப்போது கண்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்கிப்பிடித்து குடையாக நிறுத்தினார். அனைத்து உயிர்களும் அங்கு வந்து தஞ்சம் அடைந்தன. அனைத்து உயிர்களுக்கும் கிருஷ்ணர் உணவு தந்து காத்தருளினார். அதனால் தான் உணவை மலையாக வடிவமைத்து அனைவருக்கும் அன்னதானம் செய்கின்றனர்.
கோவிலில் சாதத்தை நிறைய வடித்து அதை மலை போல குவித்து அதில் பெருமாளின் திருநாமத்தை வரைவாங்க. சங்கு சக்கரம், திருமண் என எல்லாவற்றையும் வடிவமைப்பர். சித்ரா அன்னம், தயிர் சாதம், புளிசாதம், சுண்டல் வகைகள், உளுந்து வடை மற்றும் பதார்த்தங்கள் அடுக்கி வைத்து நைவேத்தியமாக வைப்பர். இது தான் அன்னக்கூடை உற்சவம்.
இதே விழாவை வடக்குப்பகுதியில் கிருஷ்ணரின் உருவத்தை அப்படியே உணவால் செய்து கோவர்த்தன மலை போல் வைத்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வர். அன்னத்தின் மேல் சொம்புவில் பாயாசம் வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பு.
காலையிலேயே குழந்தைகளின் கையில் சொம்பு கொடுத்து வீடுகளில் அரிசி வாங்கி வரச் செய்வர். அதனுடன் வீட்டில் உள்ள அரிசியையும் போட்டு சாதம் வடித்து அன்னதானம் படையலிட்டு பக்தர்களுக்குக் கொடுக்கலாம்.
எந்த வகையான பாயாசமும் செய்யலாம். எல்லா காய்கறிகளையும் போட்டு கதம்ப சாம்பார் வைக்க வேண்டும். பெருமாளை உள்ளன்போடு வழிபட்டு வேண்டலாம். இதை நம்ம வீட்டு பூஜை அறையிலேயே செய்யலாம்.