தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!

குன்றுகள் இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருப்பான். அவன் இருக்கும் இடம் எல்லாமே சிறப்பு தான். இருந்தாலும் குறிப்பிட்டு நாம் சொல்லும் அறுபடை வீடுகள் பற்றி இப்போது பார்ப்போம்.

முதல் படை வீடு

அறுபடை வீடுகளில் முதல் வீடு எது என்றால் அது திருப்பரங்குன்றம் தான். இங்கு உள்ள முருகன் கோயிலில் முருகன் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் வெகு அழகாகக் காட்சி தருகிறார். இங்கு மலை வடிவில் இருந்து சிவபெருமான் அருள்புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் இருக்கும் தலம் இது தான். அதனால் இந்த காட்சியைக் காண பக்தர்கள் திரண்டு வருவர். இதுவே இந்தத் தலத்தின் சிறப்பு.

இரண்டாம் படை வீடு

Tiruchendur
Tiruchendur

முருகனின் இரண்டாம் படை வீடாக இருப்பது திருச்செந்தூர். கடலோரத்தில் அமைந்துள்ளதால் இந்த ஊருக்கு திருச்சீரலைவாய் என்றும் பெயர் உண்டு. ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்குள்ள முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது. சுனாமி சீறி வந்த சமயத்தில் பின்னோக்கி கடல் அலையை ஓடச் செய்த அதிசயம் திருச்செந்தூரில் நிகழ்ந்தது. அதனால் சுனாமியையே வென்ற கடவுள் முருகப்பெருமான் ஆனார்.

மூன்றாம் படை வீடு

முருகனின் மூன்றாம்படை வீடு பழநி. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. பழநி முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் ஆகியவற்றை சாப்பிட்டால் சகலநோய்களும் தீரும்.

நான்காவது படை வீடு

தன்னை விட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியைத் தரும். அதை அடுத்து, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டு சிவபெருமான் அகமகிழ்கிறார். தன் பிள்ளை குருவாக இருக்க தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்கிறார்.

அதனால் சிவகுருநாதன் என்ற பெயரையே முருகன் பெற்றுள்ளார்.

ஐந்தாம் படை வீடு

thiruthani
Thiruthani

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிகிறார். பின்னர் அங்கு சாந்தமாகி அமர்ந்ததால் இத்தலத்திற்கு தணிகை என்றும் பெயர் ஏற்பட்டது.

வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் செய்து கொள்கிறார். இந்த இடமே திருத்தணி எனவும் அழைக்கப்பட்டது. அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

ஆறாவது படை வீடு

அறுபடை வீடுகளில் ஆறாவது படையாக விளங்குவது சோலைமலை. இதை தற்போது பழமுதிர்ச்சோலை என்கின்றனர். மதுரை அழகர் கோவில் செல்கையில் அதன் மலை மேல் இந்த பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு தான் ஒளவைப்பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் கேட்டார். அந்த நாவல் மரம் இன்றும் இங்கு காட்சி தருகிறது. உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருளும், மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த தலம் இதுதான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews