முருகனின் அறுபடை வீடுகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அது என்னென்ன என்று தெரியுமா?
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்ச்சோலை என்னும் 6 தலங்களும் முருகனின் அறுபடை வீடுகள்.
திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நுழைவு வாயிலில் வடக்கு பார்த்த சன்னதியில் அருள்கிறார் வினைதீர்க்கும் விநாயகர்.
இங்கு வந்து வழிபட்டால் நம் வினைகள் யாவையும் தீர்த்து வைத்து வாழ்வில் ஒரு முன்னேற்றத்தைத் தருவார் என்பது பக்தர்களின் ஐதீகம்.
விருத்தாச்சலம்
கோவில் அருகில் உள்ள ஆழத்துப் பிள்ளையார். விருத்தாச்சலத்தில் புகழ்பெற்ற பழமலைநாதர் திருக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். முதல் வெளிப்பிரகாரத்தில் சுமார் 18 அடி ஆழத்தில் அமர்ந்து இருப்பவரே ஆழத்துப் பிள்ளையார்.
படிகளில் இறங்கி இவரை வழிபடலாம். கல்வியும், செல்வமும் தருகிறார். 1000 ஆண்டு பழைமை கொண்டவர். இவருக்கு தனி கொடி மரமும், தனியான விழாவும் நடத்தப்படுகிறது. எண்ணியவற்றை அருளும் இவர் 2வது படை வீடாகக் கருதப்படுகிறார்.
திருக்கடவூர்
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு வலது புறம் இந்த பிள்ளையார் சன்னதி அமைந்துள்ளது. இது பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கி வழிபட்டார்.
கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். அமிர்தகலசம் பெற்ற தேவர்கள் இவரை வழிபட மறந்ததால் இவர் அமிர்த கலசத்தை மறைத்து விளையாடினார். அதனால் தான் இவரை கள்ளவாரணப் பிள்ளையார் என்கின்றனர்.
செல்வ வரம், கல்யாண வரம், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் போன்றவற்றை அருள்கிறார்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும் சித்திவிநாயகர் சன்னதி. மீனாட்சி அம்மன் சன்னதியில் இடது புறமாக நுழைவு வாயிலில் இந்த கணபதி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.
மாணிக்கவாசகப் பெருமான் பாண்டிய மன்னரின் விருப்பப்படி குதிரை வாகனத்தில் செல்கையில் இந்த சித்தி விநாயகரை வணங்கிவிட்டுச் சென்றதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது.
இதனால் இந்த பிள்ளையார் 1000 ஆண்டுகள் பழைமையானவர் என்று கூறலாம். சகலகாரியங்களிலும் வெற்றி அளிக்கும் சித்தி விநாயகராக இவர் விளங்குகிறார். இவரை வணங்கினால் புகழும் பெருமையும் சேரும்.
காசி
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு முன்பு துண்டு கணபதியின் ஆலயம் உள்ளது. சிறிய கோவில் என்றாலும் புகழ் பெற்றது. இவருக்கு செந்தூர வாகனத்தில் குங்கும அபிஷேகம் செய்வதால் இப்படி காட்சியளிக்கிறார். பக்தர்கள் சுண்டி மகாராஜ் என்று பரவசத்துடன் அழைக்கின்றனர்.
காசிக்கு வருபவர்கள் இந்த கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊருக்குச் செல்லவோ மாட்டார்கள். இவர் தீட்சா கணபதியாக இருந்து ஞானத்தைப் பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்குச் சென்று சுண்டிப்பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள் பிள்ளையார்பட்டிக்குச் சென்று கணபதியை வணங்கி அதே அருளைப் பெறலாம்.
திருநாரையூர்
இந்த தலத்தில் இருப்பது பொல்லாப்பிள்ளையார் சன்னதி. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர் 6வது படைவீடு. திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இடப்பக்கம் உள்ள சன்னதியில் அருளும் பிள்ளையார் உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால் பொல்லாப் பிள்ளையார் என்று போற்றி வணங்கப்படுகிறார்.
நம்பி ஆண்டார் நம்பி மூலம் தேவார திருமுறைகள் ராஜ ராஜ சோழனுக்கு கிடைக்கச் செய்தவர் இவர் தான். இவரை வழிபட கல்வியும், ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.