ஆடி தபசு என்றாலே சங்கரன் கோவில் தான் நம் நினைவுக்கு வரும். அம்பாள் பல காரணங்களுக்காக பல இடங்களில் தவம் செய்கிறாள். அதில் ஒரு காரணத்திற்காக சங்கரன்கோவிலில் தவம் செய்கிறாள்.
அதைத் தான் ஆடித்தபசாக நாம் கொண்டாடுகிறோம். கணவன் மனைவி ஒற்றுமை, இல்லறம் நல்லறமாக என தலையாய பிரச்சனைகளுக்கு இந்த திருநாளில் அம்பாளை மனமுருக வேண்டினால் போதும்.
சங்கன், பதுமன் என இரண்டு பேர். இவர்கள் இருவருக்கும் எப்போ பார்த்தாலும் பிரச்சனை இருந்து கிட்டே இருக்கும். சங்கன் சிவனை வழிபடுபவர். பதுமன் பெருமாளை வழிபடுபவர். இருவருக்கும் தன்னுடைய கடவுள் தான் பெரிசு என அடிக்கடி வாக்குவாதம் வரும். சரி. இதற்கான விடையை நாம் அம்பாளிடமே போய் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு அம்பாளிடம் வருகின்றனர்.
அப்போது சங்கன், அம்பாளிடம் அம்மா, உலகிலேயே எல்லாருக்கும் பெரிய தெய்வம் சிவபெருமான் தான்னு நான் சொல்றேன். ஆனால், பதுமன் ஒத்துக்க மறுக்கிறான் என சொல்கிறார். உடனே பதுமன் அதை ஏற்க மறுக்கிறான். காக்கும் கடவுளாக இருக்கக்கூடிய நாராயணரே பெரியவர்னு நான் சொல்றேன். இல்லன்னா நீங்க சொல்லப்போறீங்க…நீங்களே சொல்லுங்கம்மா என சொல்கிறான்.
இப்போது அம்பாள் யோசிக்கிறாள். ஒரு பக்கமே பதிலை சொல்ல முடியாது. ஏன்னா அந்தப்பக்கம் உடன் பிறந்த சகோதரர். இந்தப்பக்கம் கட்டிய கணவர். ரெண்டு பேருமே உயர்ந்தவர் என அம்பாள் சொல்கிறாள்.
அரியும் சிவனும் ஒன்று. இவர்களுக்குள் உருவ பேதைமை இருந்தாலும் அவர்களிடத்தில் உள்ள அனுக்கிரஹத்திறன் ஒன்று தான். ரெண்டு பேரும் ஒண்ணுதான்னா எங்க ஒண்ணா இருக்கிறாங்க. தனித்தனியாகத் தானே இருக்கிறாங்கன்னு கேட்கிறார்கள். அப்போ அம்பாள் நேரா சிவனிடம் போய், நாராயணரையும் அழைத்து வந்து நீங்கள் இருவரும் ஒண்ணு தான்னு இந்த உலகத்தில் நீங்க நிரூபிக்கணும்னு சொல்றாள். உடனே சிவன் சொல்கிறார்.
தேவி எதுவாக இருந்தாலும் தவத்தின் பலனாகக் காண்பது தானே உயர்ந்தது என்கிறார். அதற்கு அம்பாளும் ஆம் என்கிறாள். நாங்கள் இருவரும் ஒண்ணாக காட்சியளிக்க வேண்டுமானால் நீயும் தவம் செய் என்றார். கட்டிய மனைவியாக இருந்தாலும் தவம் செய்தால் தான் காட்சி உண்டு என்பதன் மூலம் தவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்துகிறார் சிவபெருமான்.
அப்போது அம்பாள் பூலோகத்தில் தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் தான் சங்கரன் கோவில். அங்கு தேவர்கள் எல்லாம் பசுக்கூட்டங்களாக அம்பாளுடன் வந்தனர். அம்பாள் தவம் செய்ய பசுக்கூட்டங்கள் எல்லாம் அம்பாளுக்குக் காவல் இருக்கின்றன. அப்போது இருவரும் சேர்ந்து காட்சிக் கொடுத்த திருவுருவம் தான் சங்கரநாராயணர் கோலம்.
இங்குள்ள அம்பாளின் பெயர் கோமதி அம்மன். கோ என்று சொல்லக்கூடிய பசுக்கூட்டங்களுக்கு பவுர்ணமி நிலவாய் ஒளிவிடக்கூடிய அம்பிகை தலைவியாக இருந்து அவர்களையும் பூலோகத்திற்கு அழைத்து வந்து மிகப்பெரிய தேவமாதர்களுக்கு நடுவே, தான் ஒரு அற்புத சொரூபமாக இருந்து தவம் செய்து இறைவனுடைய அற்புதக்காட்சிக்கு வித்திட்டவர். அதனால் அவளுக்கு கோமதி என்றும் ஆவுடையம்பிகை என்ற பெயரும் அமைந்துள்ளது.
சைவ வைணவ பேதைமை இன்றி உலக மக்கள் எல்லாருக்கும் சங்கரநாராயணனாக வெளிப்படுத்திய அற்புத நாள் தான் ஆடித்தபசு. இந்த நாளில் அம்பாளை வழிபாடு செய்தால், கணவனுக்கும் மனைவிக்கும் தீர்க்காயுள் ஏற்படும். இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
மாங்கல்ய பலம் கூடும். இல்லறவாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இருவரும் பிரிந்து இருந்தாலும் அம்பாளை வழிபட்டு உள்ளன்போடு பிரார்த்தனை பண்ணி கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனை தீர வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். கோவிலில் இருந்து வரும்போது யாராவது நாலு பேருக்கு அன்னதானம் பண்ணுங்க. அவங்க பசிப்பிணி நீங்கியதும் அவர்கள் நம்மை வாழ்த்துவது நமக்கு நிச்சயம் பலன் தரும்.