தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புனிதமான இடத்திற்கு சங்குமுகம் என்று பெயர். இங்கு ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இங்குள்ள கடலில் புனித நீராடுவர். முன்னதாக மூன்றாக பிரிந்த ஆறுகள் ஒன்றிணைந்து கூடும் இடத்தில் புனித நீராடுவர். பின்னர் கடலில் வந்து கூடும் இடத்தில் நீராடுவர். அங்கு கரையோரம் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடந்தால் இங்கு வந்து புனித தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கத்தில் உள்ளது.
பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்பட்டு வரும் தாமிரபரணி ஆறானது மூன்று கிளைகளாகப் பிரிந்து கலக்கும் இடம் தான் மூணாற்று முக்கு என்றும் சங்குமுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்பகுதி பழையகாயலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு நடந்து தான் செல்ல வேண்டும். ஆடி அமாவாசை அன்று செல்கையில் பாதை தெளிவாக இருக்கும். தை அமாவாசையில் ஆறுகளில் நீரோட்டம் சற்று அதிகமாகக் காணப்படும்.
இந்தப்பகுதியில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பழையகாயல் பகுதியில் உள்ள சிவன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவர். இங்குள்ள இறைவனுக்கு சங்குமுகேஸ்வரர் என்று பெயர். இறைவியின் பெயர் கமலாம்பிகை.
காயல் என்றாலே கழிமுகம் என்பது தான் அர்த்தம். அதாவது கடலைவிட்டுக் கழிந்து மணலால் தடைபட்டு கிடக்கும் நீர்த்தேக்கம் தான் காயலாகிறது. இங்கு 14 எக்டேர் பரப்பில் சதுப்பு நில காடுகளும் காணப்படுகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்களைப் பார்ப்பதற்கென்றே ஆண்டுதோறும் முக்கியத்துவம் வாய்ந்த தை மற்றும் ஆடி அமாவாசைகளில் பக்தர்கள் ஏராளமாக வந்து குவிகின்றனர். இன்று ஆடி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்குமுகத்திற்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.