இந்து தர்மத்தில் மிக முக்கியமான நாள் குரு பூர்ணிமா. இந்நன்னாளில் குருவை வணங்கி ஆசி பெற்றால் குருவருள் கிடைக்கும். அது சரி. குரு பூர்ணிமா என்றால் என்ன அர்த்தம்? அதாவது, இன்றைய நாள் மிகவும் அற்புதமான நாள். சாதாரண உயிரைக்கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயர்த்தக்கூடிய உன்னத நாள். இந்த நன்னாள் இந்த ஆண்டில் 13.07.2022 கொண்டாடப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் குரு 2 வேர்களைக் கொண்டுள்ளது. கு என்றால் இருள். ரு என்றால் நீக்குவது. குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள். பிரதிபலன் காரணம் இல்லாமல் நமக்கு கருணை ஒன்றால் மட்டுமே ஞான செல்வத்தை குருவானவர் அள்ளி அள்ளித் தருகிறார். அதனால் அவருக்கு அவ்யாஜ கருணாமூர்த்தி என்ற பெயரும் உண்டு.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நாம் சிறுவயதில் படித்து இருப்போம். இந்த வரிசையில் மாதா என்பது இடகலை. பிதா என்பது பிங்கலை. குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுவாசத்தின் மூலமாகவே நாம் மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும். இதை நன்கு உணர்ந்து கண்டுள்ளதால் தான் சித்தர்கள் இதை சிவராஜ யோக தத்துவம் என்கிறார்கள்.
இந்த நாளில் நடந்த மற்றொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் வேத வியாசர் பிறந்ததும் இன்று தான். அதனால் இதை வியாச பூர்ணிமா என்றும் சொல்வர். இவர் வேதங்களை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு பிரிவுகளாக பிரித்தார். மகாபாரதம், 18 புராணங்கள், பிரம்மசூத்திரம் இவற்றை அருளியவரும் இந்த வேத வியாசர் தான். மகாபாரதத்தை வியாசர் கூற அதை விநாயகர் எழுதியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அழியக்கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே ஒவ்வொருவரும் எப்பாடு படுகின்றனர் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்க வேண்டுமென்றால் அது குருவால் மட்டுமே முடியும்.
இது ஒரு அழியாக்கல்வி. பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வொரு உயிர்களுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் இந்த குரு பூர்ணிமா. இந்த நாளில் பௌர்ணமியும் சேர்ந்து வருவது மேலும் சிறப்பு சேர்க்கிறது.