பேசத் தெரியாததால் தான் நிறைய பிரச்சனைகளே வருகிறது. பிறர் மூலமாக நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டி உள்ளது என்றால் நாம் எப்போது எப்படி பேச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம் நாம் உதவி கேட்க வேண்டும் என்றால் உடனடியாகக் கேட்டு விடக்கூடாது.
இது சரியான நேரமா என்று பார்க்க வேண்டும். அவர் எந்த மனநிலையில் உள்ளார் என்பதைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து எடுத்தோம் கவுத்தோம் என்றும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றும் டக்கென்று உதவியைக் கேட்டுவிடக்கூடாது.
நமக்கு வேணும் என்கிற விஷயத்தையே அவர் விரும்பக்கூடிய அளவில் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்க வேண்டும். அதுவே சாலச்சிறந்தது. இப்படி பேசும்போது மட்டுமே நாம் கேட்ட காரியம் நிறைவேறும்.
இது எல்லாமே பயிற்சியால் மட்டுமே வரும். எப்போதுமே மற்றவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள். அந்தக் கண்களைப் பார்த்துப் பேச பேச இயல்பாகவே அவர்கள் என்ன மனநிலையில் இருந்து பேசுறாங்க என்பதை நாம் கண்டறிந்து விடலாம்.
முதலில் இதைப் பயிற்சியாக செய்து வாங்க. அப்போது தான் நாளடைவில் உங்களுக்கு இந்த பயிற்சி கைவரும். எடுத்த உடனேயே யாரும் சைக்கிள் ஓட்டி விடுவதில்லை. முதலில் கீழே தான் விழுவார்கள். பின் மீண்டும் மீண்டும் எழுந்து பயிற்சி செய்தால் மட்டுமே சைக்கிள் ஓட்டி பழக முடியும். கார் ஓட்டுவதும் அப்படித் தான்.
அதே போல் தான் இந்தப் பயிற்சியும். ஆரம்பத்தில் அடிக்கடி மறந்து போகும். சில சமயங்களில் நாமே சங்கடங்களில் நெளிவதுண்டு. பிறரின் கண்களைப் பார்த்துப் பேசத் தயங்குவோம். தவறு செய்தால் மட்டுமே நாம் தயங்க வேண்டும். நம் மீது எந்தவித தவறும் இல்லாவிடில் நாம் தயங்கவேண்டியதே இல்லை.
நாளடைவில் நம்முடன் பழகாத ஆளாக இருந்தால் கூட அவர்களுடன் பேசுகையில் நம்மால் அவர்களது மனநிலையைக் கண்டறிந்து விடமுடியும். நமக்கு மேல் உள்ள அதிகாரிகள், நம்மிடம் உதவி கேட்பவர்கள் என எல்லாரிடத்திலும் நாம் இப்படி தான் பேச வேண்டும்.
நேரில் மட்டுமல்ல. போனில் பேசும்போதும் இந்த விஷயங்களை எல்லாம் மனதிற்கொண்டு பேச வேண்டும். அப்படி தொடர்ந்து பேசினால் அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதை அதிகரிக்கும். இப்படி பேசும்போது உங்களது கோரிக்கை 90 சதவீதம் நிறைவேறும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு லீவ் கேட்க தயக்கமாக வரும்.
அதனால் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழிப்பார்கள். தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் விடுமுறையை அவர்கள் மனநிலை அறிந்து கேட்காமல் வசமாக மாட்டிக் கொள்பவர்களும் உண்டு. குறிப்பாக திங்கள் கிழமை விடுமுறை வேண்டும் என்றால் அன்று காலையில் போன் செய்யக்கூடாது.
வெள்ளிக்கிழமையே அலுவலகத்தில் வைத்து அன்றைய வேலை முடிந்ததும் சொல்லி விட வேண்டும். அப்போது தான் எளிதில் விடுமுறை கிடைக்கும். இதைத்தான் வள்ளுவர் கூட காலம் கருதி பேச வேண்டும் என்று தம்; குறளில் சுவைபடக் கூறுகிறார்.
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.