தற்போது வரும் தமிழ் பாடல்களில் பெரும்பாலும் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல்தான் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விளங்காத பாடல்களும் விவகாரமான பாடல்களும் குத்துப்பாடல்களுமே தமிழ் சினிமாவின் பிரதானமாக உள்ளன.
பாடல் என்பது கேட்ட உடன் அதை உள்வாங்கி நமது மனதுக்கு மருந்திடுவதாக அமைய வேண்டுமே தவிர மேலே சொன்னது போல காதுல ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருக்க கூடாது.
ஜி ராமநாதன் அய்யர்ல இருந்து எம்.எஸ்.வி அய்யா, கேவிமகாதேவன், ஷங்கர் கணேஷ், இளையராஜா என இன்னும் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய தமிழ் சினிமாவில் தற்போது பாடல் என்றால் என்ன இனிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவு ஆகி விட்டது.
வாழ்வின் அனைத்து கவலைகளையும் நினைத்து அப்படியே காற்றில் கலந்து வானொலியில் வரும் மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்று சுசீலா அம்மா வந்து பாடும்போது அந்த கடவுளின் பிரதிநிதியே வந்து இருந்து ஆறுதல் சொல்வது போல மனதை இலகுவாக்கும்.
கண்கள் இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோஎன்ற வரிகளில் வரும் காதல் பிரிவின் வலி நம்மை என்னவோ செய்யும்.
சின்ன சின்ன ரோஜாப்ப்பூவே செல்ல கண்ணே நீ யாரோ தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெற்ற தாய் யாரோ என முத்துலிங்கத்தின் வரிகளை இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸ் உருகிப்பாடும்போது மனதிலுள்ள இனம்புரியாத சோகங்கள் எல்லாம் விலகும்.
என் ஜீவன் பாடுது, நான் பாடும் மெளன ராகம், வானுயர்ந்த சோலையிலே ஆறடிச்சுவருதான் ஆசையை தடுக்குமா என பிரிவின் வலியை உணர்த்திய எத்தனை பாடல்கள் இன்றும் காவியமாய் ஒலித்து கொண்டிருக்கிறது.
ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என மறைந்த தெய்வப்பாடகி ஸ்வர்ணலதா பாடும்போது அப்படியே தெய்வீக ராகத்தை கேட்ட திருப்தி நமக்கு இருக்கும்.
வேறு மாநிலத்தில் இருந்து வந்து நம் தமிழை கற்று செண்பகமே செண்பகமே என்று பாடி உருகவைத்த ஆஷா போன்ஸ்லே, வளையோசை கலகலவென காதல் மெட்டில் கிறங்க வைத்த லதாமங்கேஷ்கர் இவர்களை பற்றி எல்லாம் சொல்ல வார்த்தையே இல்லை எனலாம்.
எத்தனை எத்தனை இனிமையான பாடல்கள் 2000ங்கள் வரை வந்து நம் காதை நனைத்தன.
தமிழ்சினிமா பாடல்களின் தற்போதைய வடிவம் மிகமிக மிக தரங்கெட்ட வடிவிலும் கேடு கெட்ட வடிவிலும் போய்விட்டது. மருதகாசி,கண்ணதாசன்,புலமைப்பித்தன், வாலி, வைரமுத்து, நா காமராசு, மு மேத்தா,முத்துலிங்கம்,பிறைசூடன் என எத்தனை எத்தனை அர்த்தமுள்ள பாடல்களை எழுதிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
சாதாரணமாக ஒரு வார்த்தை வாத்தி கம்மிங் இப்படி ஒரு வார்த்தையை மட்டும் வைத்து ஜுல்க்கா ஜில்க்கா என வார்த்தைகளையும் கோர்த்து விட்டு அது என்ன பாடல் என்றே புரிந்து கொள்ள முடியாத நிலையில் அதை ஹிட்டும் ஆக்கி விடுகிறார்கள்.
இதில் ஒரு பெரும் கொடுமை என்ன என்றால் இது போல ஜுலுக்காபுலுக்கா ஜிலாக்கி, புலாக்கி என்று வாயில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டு இதை எழுதிய பாடலாசிரியர் என பெருமையாக வேறு போட்டுக்கொள்கிறார்கள்.
வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பாட்டு எழுதி வச்சுருக்காங்க, கண்ணதாசன் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பாட்டு எழுதிருக்கார். எம்.எஸ்.வி, இளையராஜா வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பாட்டு போட்டிருக்காங்க. இவர்கள் இசையமைத்ததில் படம் ஓடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் கேட்காமல் முடங்கி போன மெட்டுக்கள் அதிகம் அவை இன்றும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதை தேடி கேட்டாலே இந்த யுகமே பத்தாது அவ்வளவு இருக்கு.
காதல், காமம் இவை இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை இந்த இரண்டும் பழைய பாடல்களில் இலை மறை காயாகவே எழுதப்பட்டன. தற்போது பச்சையாகவே வரும் வரிகளை சின்ன சிறு சிறார்களும் என்ன வரி என்று அர்த்தம் தெரியாமலே பாடி திரிகின்றன.
டச்சு பண்ணி இச்சு கொடுப்பேன் ஹனிமூனுல என இரண்டு வயது ,மூன்று வயது குழந்தை பாடும்போது மனது மிகுந்த வலியாகிறது.
எத்தனை லிரிக்கல் வீடியோ வந்தாலும் ட்ரெண்டிங் என அலப்பறை பண்ணினாலும் இசைவெளியீட்டை பிரமாண்டமாய் நடத்தினாலும் அதிகாலையில் சேலம் பஸ் ஸ்டாண்ட்லயோ,சென்னை பஸ் ஸ்டாண்ட்லயோ ஊதுபத்திகொழுத்தி சூடம் சாம்பிராணி காண்பித்து டீ பாய்லருக்கு பட்டை அடித்து கடை திறக்கும் டீக்கடைக்காரன் ,நான் பேச நினைப்பதேல்லாம் நீ பேச வேண்டும் , ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது, என மகிழ்ச்சியாக பழைய பாடல்களில் இருந்துதான் துவக்குகிறார்.
இனிமையான பாடல்களை கொடுக்க முடியாவிட்டாலும் அய்யா சினிமாக்கார புண்ணியவான்களே நம் பாரம்பரியத்தையும் நம் பண்பாட்டையும் இசையையும் காசுக்காக கெடுத்து குட்டிச்சுவராக்காதீர்கள் ஏற்கனவே ஆக்கி விட்டீர்கள் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
விஞ்ஞான முன்னேற்றங்களால் மன அழுத்தங்கள் அதிகமுள்ள காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அத்திப்பூத்தாற்போல்தான் பாடல் வருகிறது. சொல்லப்போனால் உலகமும் நாடும் நிம்மதியாய் இருந்த ஒரு காலத்தில் நிம்மதியான பாடல்கள் வந்தன. கலாச்சார மாற்றங்கள், விஞ்ஞான முன்னேற்றங்கள், நிம்மதி இல்லாமை, அதிக மன அழுத்தம்,கம்ப்யூட்டர், செல்ஃபொன்,குற்றங்கள், மரணங்கள் என தாழ்வான பகுதியை நோக்கி செல்லும் இந்த காலத்தில் அதை போக்கும் வகையில் இனிமையான பாடல்களே வருவதில்லை என்பது வருத்தமான விஷயம்
குத்துப்பாட்டு என்ற பெயரில் சினிமாக்காரர்கள் கொலையாய் கொல்கிறார்கள் இது நரகவேதனையாய் உள்ளது.
இதுதான் இதுக்குத்தான் என்ற அர்த்தமே இல்லாத வரிகளை கூட இளையராஜா இசையாக்கி இருக்கார். ஆனால் அந்த இசையையும் அந்த ஃபீட்டையும் காலம் கடந்தும் இன்றும் கேட்கும் வகையில் வைத்திருக்கிறார்.
ஆழ்ந்த கவலையில் இருப்பவர்களுக்கு பாடல் கேட்பது மருந்து என்பதை எம்.எஸ்.வி, கேவி மகாதேவன், இளையராஜா போன்றோர் ஒரு மருத்துவர் போன்று தங்கள் இசையமைத்த பாடல்கள் மூலம் அந்த மேஜிக்கை செய்து காட்டினர்.
தற்போது வரும் பாடல்களை கேட்டாலே 108க்கு அழைப்பு விடுக்க வேண்டி இருக்கிறது . தரக்குறைவான தரங்கெட்ட பாடல்களும் மிக மிக மோசமான இசையுமே தமிழ்சினிமாவில் வருகின்றன.
இந்த நிலை இன்னும் தரம் கெட்டு போவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். பல உண்மையான இசை ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தும் விசயமாகும்.