மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தற்போது ரோபோக்கள் செய்து வருகின்றன. மேலும், மனிதர்கள் கடினமாக செய்யும் வேலைகளை ரோபோக்கள் மிக எளிதாக செய்து வரும் காரணத்தினால், அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ரோபோக்கள் தற்போது விளையாட்டு துறையிலும் நுழைந்துள்ளன. சீனாவின் பீஜிங்கில், வரும் ஏப்ரல் மாதம் மனிதர்களும் ரோபோக்களும் கலந்து கொள்ளும் மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 12 ஆயிரம் மனிதர்கள் மற்றும் சில ரோபோக்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவது மனிதர்களா, ரோபோக்களா என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம் என இந்த போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மனிதர் அல்லது ரோபோவுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. விளையாட்டு துறையில் இது ஒரு மைல்கல்லாக அமையக்கூடும் என்றும், இந்த போட்டியை நடத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ரோபோக்களுக்கு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்த போட்டிக்காக தங்களுடைய தயாரிப்பு ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.
அனைத்து ரோபோக்களும் மனித வடிவில் இரண்டு கால்களை பயன்படுத்தி ஓடுவதற்கே அனுமதிக்கப்படுவர். சக்கரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தக் கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியை காண உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.