உலகில் எண்ணற்ற மோசடிக் குற்றங்கள் நடந்திருக்கின்றன. சிலர் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்று உள்ளவர்களும் உண்டு. ஹவாலா பணம் பரிமாற்றம், வருமான வரிக் கணக்குகளை மறைப்பது, மோசடிகளில் ஈடுபடுவது, சீட்டுக் கம்பெனிகள் நடத்தி எஸ்கேப் ஆவது, பொது மக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என்று ஏமாற்றி பணத்தினை அபேஸ் செய்து ஓடுவது, வரி ஏய்ப்புச் செய்வது என தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
ஆனால் இங்கு ஒரு பெண் உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை பெற்றுள்ளார் என்றால் அந்தக் குற்றத்தின் தன்மை எவ்வளவு இருக்கும் என்பதை அறியலாம்.
கிழக்காசிய நாடான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ட்ரூங் மைலான் என்ற பெண்தான் இந்த மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்டவர். சீன-வியட்நாம் குடும்பத்தில் பிறந்த ட்ரூங் மைலான் ஆரம்பத்தில் தனது தாயுடன் சேர்த்து அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் அவர் குற்றவாளி என வியட்நாம் நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்ட போது வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான வான்தின்ஹ் பாட் குழுமத்தின் தலைவராக அவர் இருந்தார்.
இந்நிலையில் வியட்நாமின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சைகோன் கமர்ஷியல் வங்கியை இவர் ரகசியமாகக் கட்டுப்படுத்தி ஷெல் நிறுவனங்கள் மூலம் சுமார் 44 பில்லியன் டாலர் கடனாகப் பெற்றிருக்கிறார். இதில் 12 பில்லயன் டாலர்கள் மதிப்பில் அவர் மோசடி செய்ததாக அவர் மீது கடந்த 2022-ல் வழக்குத் தொடரப்பட்டு கடந்த ஏப்ரலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி ட்ரூங் மைலான தன்னுடைய மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது மரண தண்டத்தினை குறைக்க எந்த முகாந்திரமும் இல்லை எனவும், மேலும் மோசடி செய்த பணத்தில் இரண்டு மடங்கினை அதாவது சுமார் 9 மில்லியன் டாலர் பணத்தினை அவர் திருப்பி அளிக்கும் பட்சத்தில் அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும் என வியட்நாம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய மதிப்பில் இவர் மோசடி செய்த தொகை சுமார் 1.01 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
லக்கி பாஸ்கர் படம் போல் நிஜத்திலும் நடைபெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.