நம் வாழ்வின் மிக முக்கியமான இன்றியமையாத, சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் அது நட்பு தான். உலக நட்பு தினம், நட்பின் புனிதத்தை போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். இந்த நாள் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படும் மற்றும் இந்தியாவில் இது பாரம்பரியமாக ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்த வருடாந்திர நிகழ்வு மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை தாண்டி, நம் வாழ்க்கையை வளமாக்கும் நண்பர்களை கௌரவிப்பதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு நேரமாகும்.
நட்பு தினத்தின் வரலாறு
1930 ஆம் ஆண்டு ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால் மூலம் நட்பு தினம் முதலில் முன்மொழியப்பட்டது. நண்பர்கள் தங்கள் உறவைக் கொண்டாடவும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆரம்பத்தில், இது அமெரிக்காவில் பிரபலமடைந்து பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இருப்பினும், 1958 வரை பராகுவேயில் தான் முதல் உலக நட்பு தினம் முன்மொழியப்பட்டது.
2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30 ஆம் தேதியை சர்வதேச நட்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இருந்தபோதிலும், இந்தியா உட்பட பல நாடுகள் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றது.
நட்பு தினத்தின் முக்கியத்துவம்
நம் தாய், தந்தை, சகோதரன், சதோகரி, சொந்த பந்தங்கள் ஆகியவற்றை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நண்பர்கள் என்பது நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம், வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் நம்மோடு பயணித்து ஆதரவையும், அன்பையும், தோழமையையும் வழங்குகிறது. இந்த நாள் இந்த சிறப்பு உறவுகளை மதிப்பதற்கும், நிபந்தனையின்றி தோள் கொடுத்து நிற்கும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும்.
உலகம் முழுவதும் நட்பு தினத்தின் கொண்டாட்டங்கள்
நட்பு தினத்தின் கொண்டாட்டங்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் வேறுபடுகின்றன. இந்தியாவில், நண்பர்கள் நட்பு அட்டைகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்வார்கள். சமூக ஊடக தளங்கள் இதயப்பூர்வமான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை பரிமாறி கொள்வார்கள். #FriendshipDay போன்ற ஹேஷ்டேக்குகள் நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருக்கும். பலர் இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒன்றுகூடல், விருந்துகள் மற்றும் வெளியூர் பயணங்களை ஏற்பாடு செய்து நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வார்கள்.