உலக மூளை தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…

By Meena

Published:

உலக மூளை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி, மூளை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை நினைவுகூரும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். இந்நாளில், பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடி, நரம்பியல் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

உலக மூளை தினத்தின் வரலாறு
ஜூலை 22, 1957 ஆம் ஆண்டு உலக நரம்பியல் கூட்டமைப்பு (WFN ) நிறுவப்பட்டது. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலக மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

உலக மூளை தினம் 2024 தீம்
இந்த ஆண்டு 2024, உலக மூளை தின தீம் “மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு”. நரம்பியல் நோய்களுக்கான ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது மற்றும் நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்த உலகளாவிய கல்வியைப் பரப்புதல் ஆகியவை ஆகும்.

உலக மூளை தினத்தின் முக்கியத்துவம்
இந்தியாவில் 2019 ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த முப்பது ஆண்டுகளில் (1990-2019), இந்தியாவில் தொற்றாத மற்றும் காயம் தொடர்பான நரம்பியல் நோய்களின் சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது. பல்வேறு தொற்றாத நரம்பியல் கோளாறுகளில், பக்கவாதம் (37.9%), ஒற்றைத் தலைவலி மற்றும் டென்ஷன் வகை தலைவலி (17.5%) மற்றும் கால்-கை வலிப்பு (11.3%) ஆகியவை இந்தியாவில் நரம்பியல் நோய்களில் முக்கியமானவை ஆகும்.

மூளைக் கோளாறுகள் உலகின் மிக விலையுயர்ந்த நோய் சிகிச்சைகளில் ஒன்றாக இருந்தாலும், இயலாமை மற்றும் இறப்புக்கான முக்கிய காரணமாக இருந்தாலும், மற்ற நோய்களுடன் ஒப்பிடும்போது இந்த நோய் தடுப்பு விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. எனவே, மூளை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்க் கட்டுப்பாட்டுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் இந்த உலக மூளை தினம் அனுசரிக்கப்படுவது மிக முக்கியமானது ஆகும்.