பொதுவாக ஒரு மனிதருக்கு தூசி, மகரந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் அலர்ஜி ஏற்படலாம், அதனால் சில நோய்கள் உண்டாகலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விந்தணுவே அலர்ஜியாக இருந்து, அதனால் அவர் கர்ப்பம் தரிக்க முடியாமலும், தொடர்ச்சியாக சில நோய்களுடன் போராடியும் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிதுவேனியாவை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு அவரது கணவரின் விந்தணுவால் அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டது. இது மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நிகழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தம்பதியினர் குழந்தை வேண்டும் என்பதற்காக இயற்கையான கருத்தரிப்பு முறைகளை முயற்சித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் கணவருடன் உடலுறவு கொண்ட பிறகு அந்த பெண்ணுக்குத் திடீரென அலர்ஜி ஏற்படுவதும், அதற்காக சிகிச்சை எடுத்து கொள்வதும் தெரிய வந்தது. கணவருடன் உடலுறவு கொண்டபின் அவருக்கு ஆஸ்துமா, தூசி அலர்ஜி போன்ற பிரச்சினைகள் தீவிரமடைவதாகவும், இதுதான் அவர் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் என்றும் மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் அலர்ஜியை எதிர்த்து போராட உதவும் வெள்ளையணுக்களின் அளவை சோதித்தபோதுதான், கணவரின் விந்தணுவால் தான் இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினர். மனித விந்தணு என்பது ஒரு பெண்ணுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது மிகவும் அரிய நிகழ்வு என்றும், அந்த நிகழ்வு இந்த பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உடலுறவுக்கு பின் அந்த பெண்ணுக்கு மூக்கடைப்பு, கண்கள் எரிச்சல், பிறப்புறுப்பில் அசௌகரியம் போன்ற அலர்ஜிகள் ஏற்பட்டதாகவும், எனவே பாதுகாப்பாக ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் அந்த பெண் பிடிவாதம் பிடித்ததால், மருத்துவரின் அறிவுரையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், தொடர்ச்சியாக அந்த பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், வேறொரு திருமணம் செய்து தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், விந்தணு ஒவ்வாமையால் விவாகரத்து வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
