அமெரிக்காவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் ரே என்ற பெண், தனது கணவருக்கு அலுவலகத்திற்கு மதிய உணவு சமைத்துக் கொண்டு செல்வதற்காக தினமும் ரூ.1167 கட்டணம் வசூலிப்பதாக ஒரு டிக்டாக் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயான ரே, டிக்டாக்கில் ஏராளமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். ரே சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தனது கணவருக்கு தினமும் வீட்டில் சமைத்த உணவை கொண்டு செல்வதாகவும், அதற்காக அவரிடம் ரூ.1167 வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது செயலை நியாயப்படுத்தி, “ஒருவேளை நான் சாப்பாடு கொண்டு செல்லாவிட்டால், என் கணவர் மெக்டொனால்ட்ஸ் அல்லது கிரெக்ஸ் போன்ற இடங்களில் உணவை வாங்குவார். அதற்காக அவர் செலவிடும் தொகைதான் இந்த ரூ.1167. அந்த பணத்தை தான் நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உங்களுக்கு ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்கு பணம் செலுத்த முடியும் என்றால், உண்மையாகவே உங்களுக்காக அக்கறையுடனும் அன்புடனும் வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் எனக்கு ஏன் செலுத்தக் கூடாது?” என்றும் ரே கேள்வி எழுப்பினார். தனது கணவர் மகிழ்ச்சியுடன் தனக்கு மதிய உணவுக்காக பணம் கொடுப்பதாகவும், இது தனது நேரம், கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றல் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதால், அதற்கு கட்டணம் பெறுவதில் தமக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரேயின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்:
குடும்பம் என்பது பரஸ்பர அன்பை செலுத்துவதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும் அல்லவா?” என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். “இதே போன்று உங்கள் கணவர் உங்களுக்கு ஒரு உதவி செய்து அதற்கான பணத்தை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றும் பலர் கேட்டுள்ளனர். “நல்லவேளை உணவு கொண்டு செல்வதற்கு மட்டும் பணம் கேட்டீர்கள், மற்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் பணம் கேட்டால் உங்கள் கணவரின் நிலை என்ன ஆகும்?” என்றும் சில வேடிக்கையான கருத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ, திருமண உறவுகளில் வீட்டு வேலைகளின் மதிப்பு மற்றும் அதற்கு நிதி அங்கீகாரம் தேவையா என்பது குறித்த ஒரு பரந்த விவாதத்தை தூண்டியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
