அமெரிக்க அரசாங்கம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், அதிகாரப்பூர்வமாக அரசாங்க முடக்கத்தை அடைந்துள்ளது. குடியரசு கட்சியினர் கொண்டு வந்த இடைக்கால நிதி மசோதாவை செனட்டில் ஜனநாயக கட்சியினர் தடுத்து நிறுத்தியதால், நள்ளிரவு காலக்கெடுவுக்குள் நிதி மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.
முடக்கம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், சுகாதார செலவுகள் தொடர்பான பிளவுகள்தான். சட்டவிரோத குடியேறிகளுக்கு சுகாதாரப் பலன்களை வழங்குவது தொடர்பான விவாதமே இந்த பிளவுக்கு மையமாக உள்ளது.
குடியரசுக் கட்சியினர், ஜனநாயக கட்சியினரே அரசாங்க முடக்கத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத குடியேறிகளுக்கு சுகாதார பலன்களை வழங்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் பிடிவாதம் செய்வதால், நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பதிலளித்த ஜனநாயக கட்சியினர், குடியரசு கட்சியினர் பொய் சொல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத குடியேறியவர்களுக்கு ACA, Medicare அல்லது Medicaid திட்டங்களில் காப்பீடு பெறுவதற்கு ஏற்கனவே தடை உள்ளதாகவும், தாங்கள் முன்வைக்கும் மசோதாவில் இதுபோன்று எந்த ஒரு பிரிவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த முடக்கத்தால், பல கூட்டாட்சி அமைப்புகள் அவசியமற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இதனால், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தாலும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
விசா, பாஸ்போர்ட் வழங்குதல், மத்திய கடன் ஒப்புதல்கள் மற்றும் சமூக திட்டங்களை அணுகுதல் போன்ற பல செயல்முறைகள் தாமதமாகும். தேசிய பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்படலாம்.
கடந்த கால முடக்கங்களை விட இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த முடக்கத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் அளவை குறைக்க போவதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முடக்கம் ஏற்பட்டால், பல கூட்டாட்சி ஊழியர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யலாம் என்றும், அதற்கு ஜனநாயக கட்சியினரே காரணம் என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் வந்தவர்களுக்கு முழு சுகாதாரப் பலன்களை வழங்க ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள். எந்த அமைப்பாலும் அதை கையாள முடியாது. மேலும், அவர்கள் எல்லையை மீண்டும் திறக்க விரும்புகிறார்கள். இதை என்னால் செய்ய முடியாது’ என்று டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று குடியரசு கட்சியினர் சூளுரைத்துள்ள நிலையில், இந்த முடக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
