முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்..
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமான நிலையில், அவருடைய உடல் குறித்த புகைப்படங்களை முதல்முறையாக வாடிகன் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் வாடிகன் நகரில் உள்ள Chapel of Santa Marta என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு உடை அணிந்த அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, உரிய மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை போப் இறுதி நிகழ்ச்சியை தயார் செய்ய ஆலோசனை தொடங்கியதாகவும், தற்போது ரோமில் உள்ள கார்டினல்கள் இறந்த பிறகு நடைபெறும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போப் மறைவு என்பது 9 நாள் துக்க காலத்துடன் தொடங்குகிறது என்றும், அவரது நினைவாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும், பாரம்பரியமான இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி சடங்கிற்கான சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
போப் உடலுக்கு அஞ்சலி செலுத்த, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.