இன்னொரு உலகப்போர் வந்தால் அது சிப்களுக்காக தான்.. அமெரிக்கா, சீனா போட்டி போட்டு தயாரிக்கும் சிப்கள்.. NVIDIAவை விஞ்சிவிடுமா சீனா? இந்தியாவும் சிப் தயாரிப்பு களத்தில் குதிப்பு.. சிப் பற்றாக்குறை ஏற்பட்டால் உலகமே ஸ்தம்பிக்க வாய்ப்பு?

உயர் ரக செமிகண்டக்டர்களுக்கான அமெரிக்காவின் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில், சீன தொழில்நுட்ப துறையை பாதுகாக்க பெய்ஜிங் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் அதிநவீன சிப்களின் பற்றாக்குறை மிக மோசமாகிவிட்டதால், எந்த நிறுவனங்களுக்கு அவை…

chip

உயர் ரக செமிகண்டக்டர்களுக்கான அமெரிக்காவின் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில், சீன தொழில்நுட்ப துறையை பாதுகாக்க பெய்ஜிங் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் அதிநவீன சிப்களின் பற்றாக்குறை மிக மோசமாகிவிட்டதால், எந்த நிறுவனங்களுக்கு அவை கிடைக்கும் என்பதை இப்போது அரசே தீர்மானிக்க தொடங்கியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, சீனாவின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான SMIC -ன் உற்பத்தியில் சீன அதிகாரிகள் தலையிட நாட்டில் சிப்களின் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை இயக்க தேவையான சிப்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டு தொழில்நுட்ப ஜாம்பவானான ஹவாய் டெக்னாலஜிஸ் (Huawei Technologies) நிறுவனத்தின் தேவைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். சிப்களின் தட்டுப்பாடு சீன தொழில்நுட்பத் துறையை வெகுவாக பாதித்துள்ளது:

சிறிய ஏ.ஐ. நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிப் விநியோகத்திற்காக போட்டியிடுகின்றன. சில நிறுவனங்கள் கூறுகளின் பற்றாக்குறையால் புதிய தயாரிப்புகளை வெளியிடுவதை தள்ளிப்போட்டுள்ளன.

சில நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை தொடர, அதிக செயல்திறன் கொண்ட NVIDIA சிப்களை கடத்தி பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவாய் போன்ற நிறுவனங்கள், ஏ.ஐ. மாடல்களை பயிற்றுவிப்பதற்காக, ஆயிரக்கணக்கான பழைய ரக சிப்களை ஒன்றிணைத்து, அதிக ஆற்றலை செலவழிக்கும் மாபெரும் அமைப்புகளை உருவாக்குகின்றன. இது, ஏ.ஐ. போட்டியில் சீனா எவ்வளவு பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்காவில் ஏற்றுமதி தடைகளை எந்த அளவுக்கு விரிவுபடுத்துவது என்பதில் உயர் அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. சில அதிகாரிகள், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் இராணுவம் முன்னேறுவதை தடுக்க இந்த தடைகள் அவசியம் என்று வாதிடுகின்றனர். வேறு சிலர், ஏற்றுமதியை தடுப்பது Nvidia போன்ற அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும் என்றும், சீனாவை வேகமாக புதிய கண்டுபிடிப்புகளை செய்ய தூண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையில், Nvidia CEO ஜென்சன் ஹுவாங், சீனா விரைவில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்றும், அதை முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை விட சீனா குறைந்த அளவே பின்தங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனா உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், அதுவும் சவால்களுடன் உள்ளது. அரசுக்கு சொந்தமான தரவு மையங்கள் (Data Centers) NVIDIA சிப்களை படிப்படியாக நீக்கிவிட்டு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப்களை சார்ந்து இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உள்நாட்டுச் சிப்கள் அதிக வெப்பமடைதல், அடிக்கடி செயலிழத்தல் மற்றும் மெதுவான செயல்பாடு போன்ற முக்கிய பிரச்சினைகளை தருவதாக பல பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சீனா இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. பழைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிப்களை மறுவடிவமைப்பு செய்யவும், ஏ.ஐ. ஆராய்ச்சியை தொடர அதிக மின்சாரம் தேவைப்படும் தரவு மையங்களுக்கு உள்ளூர் அரசுகள் மானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிநவீன சிப் கருவிகள் கிடைக்காததால், சீனாவின் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. நடப்பாண்டில் அமெரிக்க தொழிற்சாலைகள், சீனாவை விட பல மடங்கு அதிக உயர் ரக சிப்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ல் இந்தத் தொழில்நுட்ப இடைவெளி மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செமிகண்டக்டர்களுக்கான இந்த போர், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றின் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பார்கள் என்பதை பற்றியதாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் சிப் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் இன்னொரு உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகவோ, பெட்ரோலுக்காகவோ இருக்காது, அது சிப்களுக்காகவே இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.