அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் எட்டு போர்களை நிறுத்தியதாக கூறிவரும் நிலையில், நைஜீரியாவுடன் ஒரு புதிய போரை தூண்டியுள்ளதாக கூறப்படுவது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் இருப்பது பெட்ரோல் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களே என்று கூறப்படுகிறது.
நைஜீரியா உலகின் பத்தாவது பெரிய கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடு. இங்கு உற்பத்தியாகும் பெட்ரோலில் சல்பர் அளவு குறைவாக இருப்பதால் அது ‘ஸ்வீட் பெட்ரோல்’ என்று அழைக்கப்படுகிறது. இதைச் சுத்திகரிப்பது எளிது, மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைவு.
நைஜீரியாவின் டங்கோட்டே என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு சுத்திகரிப்பு ஆலை, 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 6.5 லட்சம் பீப்பாய்கள் திறன் வரை வளர்ந்துள்ளது. இது அடுத்த ஆண்டு 10 லட்சம் பீப்பாய்களை தாண்டி, உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர் தரமான பெட்ரோலை குறிவைத்தே அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதாகவும், நைஜீரியாவின் இந்த ஆலை வளர்ந்தால், அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால், அதை கைப்பற்றவோ அல்லது அதிலிருந்து பங்கு பெறவோ டிரம்ப் முயற்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் உள்ள பொக்கோ ஹாரம் போன்ற தீவிரவாத குழுக்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு தரப்பினரையும் தாக்குகின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் கூறுவது, தனது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களை மறைக்கும் ஒரு சாக்காக பயன்படுத்தப்படுகிறது.
டிரம்ப்பின் முக்கிய நோக்கம், தரமான எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதேபோல் உலகிலேயே அதிகளவில் எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுலா. அதாவது உலக மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் இருந்துதான் கிடைக்கிறது. இது சவுதி அரேபியாவை விட அதிகம். ஆனால், அந்நாட்டின் அதிபர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்காமல், உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகிறார்.
வெனிசுலாவில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாக கூறிக்கொண்டு, அமெரிக்கா தனது இராணுவத்தை அந்நாட்டின் எல்லை பகுதியில் இறக்கியுள்ளது. வெனிசுலாவின் தற்போதைய அதிபரை கவிழ்த்துவிட்டு, தனக்கு ஆதரவான ஒரு ஆட்சியை நிறுவ டிரம்ப் முயல்வதாகவும், இதுவும் எண்ணெய் வளங்களை கையகப்படுத்தும் முயற்சியே என்றும் கூறப்படுகிறது.
நைஜீரியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகமாக நடைபெறுவதாகவும், இது எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் சார்ந்த வர்த்தகம் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள வளங்களை சீனா கைப்பற்றுவதை தடுப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் டிரம்ப்பின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் அதிகப்படியான பெட்ரோல் மற்றும் தாது பொருட்கள் உள்ளன. ஆனால், அங்குள்ள நாடுகளிடம் அவற்றை எடுக்க தேவையான தொழில்நுட்பம் இல்லை. இதற்கு வரலாற்று ரீதியாக ஐரோப்பிய நாடுகள் காலனி ஆதிக்கம் செலுத்தியதே காரணம். சீனா கடந்த 30 ஆண்டுகளில் இங்கு எண்ணெய் உற்பத்தியை வேகமாக பெருக்கி உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது என்ற பெயரில், வளமான ஆப்பிரிக்கா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளின் வளங்களை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் டிரம்பின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
