அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் ஆற்றிய உரை, உலக அரங்கில் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளை வெளிப்படையாக பிரதிபலிப்பதாக அமைந்தது. அவரது வலதுசாரி சித்தாந்தம், ஐ.நா.வின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, உலகத் தலைவர்களிடையே பெரும் விவாதத்தையும், சிலசமயம் கேளிக்கையையும் ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆற்றிய இந்த உரை, “ட்ரம்பிசம் அன்பிளக்டு” (Trumpsm Unplugged) என அவரது ஆதரவாளர்களாலும், “ட்ரம்பிசம் அன்ஹென்ச்ட்” (Trumpism Unhinged) என விமர்சகர்களாலும் வர்ணிக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்கு பதிலாக ஒரு மணி நேரம் பேசிய ட்ரம்ப், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. ஐ.நா.வை அவர் கடுமையாக விமர்சித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐ.நா. ஒரு “முக்கியமற்ற, ஊழல் நிறைந்த, தீங்கு விளைவிக்கக்கூடிய அமைப்பு” என்று அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.
ட்ரம்ப் ஐ.நா.வை விமர்சிப்பதற்கு ஒரு தனிப்பட்ட காரணமுன் உண்டு. ரியல் எஸ்டேட் வணிகரான அவர், 2001-ல் ஐ.நா. கட்டிடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை தனது நிறுவனத்துக்கு வழங்கும்படி கோரினார். ஆனால், ஐ.நா. அதை நிராகரித்தது. இந்த நிகழ்வை மனதில் வைத்தே, ஐ.நா. பல்லாயிரக்கணக்கான டாலர்களை வீணடித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் ட்ரம்பின் பேச்சில், புவி வெப்பமயமாதல் ஒரு “ஏமாற்று வேலை” என்ற அவரது நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இது ஒரு அறிவியல் உண்மை என்பதை அவர் ஏற்க மறுத்ததுடன், சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களையும் கேலி செய்தார். இது, உலக நாடுகளின் புவி வெப்பமயமாதல் போராட்டங்களுக்கு ஒரு பின்னடைவாக கருதப்பட்டது.
சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஐரோப்பிய நாடுகளை “நரகமாக” மாற்றி வருகின்றன என ட்ரம்ப் எச்சரித்தார். அமெரிக்காவில், சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவதன் மூலம் எல்லை மீறல்கள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது, அமெரிக்கா தனது எல்லைகளை இறுக்கமாக்க வேண்டும் என்ற அவரது உள்நாட்டு அரசியலைத் தெளிவாக வெளிப்படுத்தியது.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டார். ஒருபுறம், ரஷ்யாவை “பேப்பர் டைகர்” (Paper Tiger) என வர்ணித்து, அதன் இராணுவ பலத்தை கேலி செய்தார். இந்த பட்டப்பெயரை முதன்முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சிக்க மாவோ சேதுங் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீண்டும் பெறும் என தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டார்.
ட்ரம்ப் தனது உரையின் தொடக்கத்தில், அமெரிக்கா பொற்காலத்தில் வாழ்ந்து வருவதாக கூறி தன்னை புகழ்ந்துகொண்டார். மேலும், ஏழு போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போரை தான் தடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் கூறினார். இந்த கூற்றை அவர் 40-க்கும் மேற்பட்ட முறை கூறியிருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இதை அதிகாரபூர்வமாக ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேல்-காசா போர் குறித்து ட்ரம்ப் பேசியது அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பது, ஹமாஸ் இயக்கத்திற்கு வழங்கப்படும் ஒரு வெகுமதி என்று அவர் கூறினார். போருக்கு பிறகு காசாவை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா நிர்வகிக்கும் என்ற ஒரு புதிய திட்டத்தை அவர் முன்மொழிந்தார். இந்த திட்டத்தின்படி, காசா மக்கள் தாமாக முன்வந்து வேறு நாடுகளுக்கு குடியேறினால், அவர்களுக்கு பணமும் பிற உதவிகளும் வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்து ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் ஏற்க மறுத்துள்ளன. மொத்தத்தில், ட்ரம்பின் பேச்சு, அவரது “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற வெளியுறவு கொள்கையையும், உலகளாவிய அமைப்புகளை நிராகரிக்கும் அவரது மனநிலையையும் பிரதிபலித்தது. ஐ.நா.வின் சர்வதேச ஒத்துழைப்புக்கு மாறாக, அவர் தனித்துவமான ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். இது, உலகமே ஒரே நாடாக மாறி வரும் தற்போதைய சூழலில், அவரது அரசியல் நகர்வுகள் எந்த திசையில் செல்கின்றன என்பதை புரிந்துகொள்ள உதவியது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
