அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக தொடங்கியுள்ள போர், தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய பெருங்கடல் வரை தீவிரமடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று ஈரானின் மிக முக்கியமான போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ் தானா’ , இலங்கை கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எதிரி நாட்டு போர்க்கப்பலை நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்கி மூழ்கடித்த முதல் நிகழ்வாக இது கருதப்படுகிறது. இத்தாக்குதலால் ஈரானிய கடற்படையின் கௌரவமாக கருதப்பட்ட கப்பல் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தற்காப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு தனது தாயகம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் இக்கப்பல் பாதுகாப்பாக இருக்கும் என்று ஈரான் கருதிய வேளையில், அமெரிக்காவின் திட்டமிட்ட தாக்குதல் அதனை சிதைத்துள்ளது. இந்த தாக்குதலின் போது சுமார் 180 பணியாளர்கள் கப்பலில் இருந்ததாக கணிக்கப்படுகிறது. இதில் 87 மாலுமிகள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது உடல்களை காலி துறைமுகம் வழியாக ஈரானிடம் ஒப்படைக்க இலங்கை அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் மீட்பு பணியைத் தொடங்கினர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 ஈரானிய மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டெடுத்து, காலி நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது. இவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சிலருக்கு தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கை அரசு இந்த விவகாரத்தில் தனது மனிதாபிமான அடிப்படையிலான கடமையை செய்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்து, அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்களை தாக்கி வருகிறது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரு நாளைக்குச் சுமார் 13 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கடந்து செல்லும் இந்த பாதையை ஈரான் முடக்கியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படையை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
போர் தொடங்கி ஐந்து நாட்களே முடிந்துள்ள நிலையில், அமெரிக்கா பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமான அல்-உதித் தளத்தில் இருந்த 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரேடார் அமைப்பு ஈரானிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், குவைத் வான் பாதுகாப்பு படையினரின் தவறான இலக்கு நிர்ணயத்தால் மூன்று அமெரிக்க எப்-15இ போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. இதுவரை சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள போதிலும், இலங்கை அரசு நடுநிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஈரான் இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி சந்தையாக இருப்பதால், அந்நாட்டுடன் உள்ள உறவையும் அதேசமயம் சர்வதேச ராஜதந்திர உறவுகளையும் சமநிலைப்படுத்த இலங்கை முயற்சிக்கிறது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர் இந்தியப் பெருங்கடல் பகுதியை ஒரு புதிய போர்க்களமாக மாற்றி வருவது பிராந்திய பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இந்த பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், களத்தில் தாக்குதல்கள் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
