டேய்.. அவரு அமெரிக்க அதிபர்டா.. இப்படி சோதிக்கிறீங்க.. டிரம்ப் மனைவியுடன் சென்ற எஸ்கலேட்டர் திடீர் நிறுத்தம்.. பேசி கொண்டிருந்தபோது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை.. டிரம்பை கலாய்க்கிறார்களா ஐநா ஊழியர்கள்? ஒரு வல்லரசு நாட்டு அதிபர்ன்னு கூட பார்க்காம….!

ஐக்கிய நாடுகள் சபையின் 2025 ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் சென்ற எஸ்கலேட்டர் திடீரென பழுதடைந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினர். வெள்ளை…

trump wife

ஐக்கிய நாடுகள் சபையின் 2025 ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் சென்ற எஸ்கலேட்டர் திடீரென பழுதடைந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினர். வெள்ளை மாளிகை இதனை “சதி” என்று குற்றம்சாட்டியுள்ள நிலையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு ஐ.நா. ஊழியர்கள் இது குறித்து கேலி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஐக்கிய நாடுகள் சபையில் எனக்கு கிடைத்தது என்னவென்றால், மேலே சென்று கொண்டிருந்த எஸ்கலேட்டர் பாதியிலேயே நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக மெலனியா நல்ல உடல் நிலையில் இருந்ததால், கீழே விழவில்லை. நாங்களும் நல்ல நிலையில் இருந்தோம், எனவே நின்றுவிட்டோம்” என்றார்.

எஸ்கலேட்டர் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐ.நா. ஊழியர்கள் காரணம் என தெரியவந்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் எச்சரித்துள்ளார். அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்திலும், “ஐ.நா.வில் யாராவது வேண்டுமென்றே லிஃப்டை நிறுத்தியிருந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஐ.நா. ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்திவிட்டு, “பணம் தீர்ந்துவிட்டது என்று அவரிடம் சொல்லுங்கள்” என நகைச்சுவையாகப் பேசியதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், ஐ.நா. இந்த விபத்துக்கு எளிமையான விளக்கத்தை அளித்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-ன் செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் கூறுகையில், “எஸ்கலேட்டர் படிக்கட்டுகளில் உள்ள பாதுகாப்பு சாதனம் தற்செயலாக செயல்பட்டதால், லிஃப்ட் நின்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க குழுவினரின் வருகையை வீடியோ எடுத்த நபர், தெரியாமல் அந்த சாதனத்தை தொட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டிரம்ப் தனது உரையின் போது செயல்படாத டெலிப்ராம்ப்டர் குறித்தும் குறிப்பிட்டு, “இந்த டெலிப்ராம்ப்டரை இயக்குபவர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்” என்று கோபத்துடன் கூறினார். ஆனால் டெலிப்ராம்ப்டர் பழுது குறித்து பேசிய டுஜாரிக், “அமெரிக்க அதிபருக்கான டெலிப்ராம்ப்டர் வெள்ளை மாளிகையாலேயே இயக்கப்படுவதால், அது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து ட்ரம்ப் தனது பேச்சில், “ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து எனக்கு கிடைத்தது, பாதியிலேயே நின்ற ஒரு மோசமான எஸ்கலேட்டர் மற்றும் வேலை செய்யாத ஒரு மோசமான டெலிப்ராம்ப்டர் மட்டுமே என்று வெறுப்பில் கூறினார்.