உக்ரைனில் நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டிற்கான முழு அளவிலான தயாரிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கான இலக்குகள் மற்றும் சிக்கல்கள் குறித்து ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் கொடுத்த அறிவுறுத்தல்களை அனைவரும் தற்போது செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த உயர்மட்ட சந்திப்புக்கான பொருத்தமான சூழ்நிலைகளை தயார் செய்வதற்கான விரிவான குழுப்பணிகள் இன்னும் தொடங்கவில்லை. “இவை அனைத்தும் இனிமேல் தான் தொடங்க உள்ளன. எனவே, இந்த கட்டத்தில் பல கேள்விகள் அவசரமானவை” என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
டிரம்பு, புதின் சந்திப்பு விஷயத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இருக்க முடியாது. நாங்கள் அனைத்து அறிக்கைகளையும் கேட்டறிகிறோம், அதை கொண்டுதான் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். நிலைப்பாடுகளை பரிமாறி கொள்ளும் வாய்ப்புள்ள பணி மற்றும் நிபுணர் மட்டத்திலான தொடர்புகளும் உள்ளன என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது..
கியேவில் இருந்து வரும் அறிக்கைகள் “முரண்பாடுகளால் நிறைந்துள்ளன” என்றும், இது அமைதித் தீர்வுக்கான செயல்முறைக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை என்றும் கிரெம்ளின் குறிப்பிடுகிறது. ஆனால், ரஷ்யாவின் நிலைப்பாடும், அதிபர் புடினின் நிலைப்பாடும் நிலையானது மற்றும் அனைவரும் அறிந்ததே. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்களுடனான தொடர்பு தொடர்ந்து நீடிக்கிறது, ஆனால் கியேவில் காணப்படும் முரண்பாடுகள் இந்த செயல்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன், வரவிருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான உயர்மட்ட சந்திப்பை “அமைதிச் சந்திப்பு” என்று அழைத்துள்ளார். இதில் உக்ரைன் பங்கேற்க அழைக்கப்பட்டதா? ஐரோப்பிய தரப்பு எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படும்? ஏதேனும் ஆவணங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு, “இப்போதைக்கு மேற்கூறியவை குறித்து எந்த விவரங்களும் இல்லை. இந்த விவகாரத்தில் எந்த ஒரு புரிதலும் இல்லை, இன்னும் நிறைய ‘ஹோம்வொர்க்’ செய்ய வேண்டியுள்ளது. வெளியுறவு அமைச்சகங்கள் மூலம் நாங்கள் பணியாற்ற வேண்டும்” என்று பெஸ்கோவ் பதிலளித்தார்.
புடின்-டிரம்ப் தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது, பிராந்தியங்களை மாற்றியமைக்கும் அமைதி ஃபார்முலா குறித்து விவாதிக்கப்பட்டதாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதாவது, டான்பாஸ் முழுவதற்கும் ஈடாக, ரஷ்யா தன்னால் கட்டுப்படுத்தப்படாத கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பகுதிகளின் மீது உரிமை கோர தயாராக இல்லை என்று கூறப்பட்டது. இது உண்மையா? ரஷ்யா தனது ஜூன் 2024 நிலைப்பாட்டில் இருந்து விலகிவிட்டதா?
இந்தக் கேள்விக்குக் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் உறுதியான பதிலை தவிர்த்து, “அந்த தொலைபேசி உரையாடல் குறித்து நாங்கள் கொடுக்க விரும்பிய தகவலை பகிர்ந்தோம். கூடுதலாக எதையும் எங்களால் தெரிவிக்க முடியாது” என்று கூறினார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தான் இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டால் வருவதற்கு தயார் என்று கூறியது குறித்து கிரெம்ளின் கருத்து தெரிவிக்கவில்லை. திட்டமிடப்பட்ட சந்திப்பு குறித்து இன்னும் எந்த விவரமும் இல்லாததால், அது முன்கூட்டியே எடுக்கப்பட்ட கருத்து என்று கூறினார்.
மொத்தத்தில் இந்த சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்றும், அப்படியே நடந்தாலும் டிரம்புக்கு புதின் எந்தவிதமான போர் நிறுத்த வாக்குறுதியையும் தரமாட்டார் என்றும், மொத்தத்தில் டிரம்பை ரஷ்யா முட்டாளாக்குகிறது என்று தான் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
