டிக் டாக் செயலியை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஏப்ரல் 5 வரை கெடு விதித்திருந்தார். அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 75 நாட்களுக்கு கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்குள் பைடான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால், அந்த செயலி தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக் டாக் செயலியை வாங்க பல அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், அமேசான் உள்பட பல நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய விருப்பத்தை அமெரிக்க அதிபரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆபாச இணையதளங்களில் ஒன்றான “ஒன்லி பான்ஸ்” என்ற பிரபல இணையதளம், டிக் டாக் செயலியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தாங்கள் ஏற்கனவே நடத்தும் ஒன்லி பான்ஸ் மாதிரி அல்ல இது. குடும்பம் மற்றும் நட்பு சார்ந்த படைப்பாளிகளுக்காக டிக் டாக் செயலியை வாங்க விரும்புகிறோம்” என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக் டாக் செயலியை வாங்குவதற்கான முக்கிய காரணம், படைப்பாளிகளும் பயனர்களும் இருவரும் லாபம் பெற வேண்டும் என்பதற்காகவே என்றும், “நாங்கள் இந்த செயலியை வாங்கினால், இது வீடியோ பதிவாளர்களுக்குப் பெரும் வருமானத்தை பகிர்ந்தளிக்கும்” என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் இந்த செயலி யாருக்கு கிடைக்கும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கையில்தான் உள்ளது. எனவே, அவரது முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.