82 முறை TOUR பட்டம் வென்ற டைகர் வூட்ஸ், கடந்த சில வாரங்களாக, வனேசாவுடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவர் தனது காதலை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“காதல் காற்றில் கலக்கிறது, உன்னுடன் வாழ்வது இன்னும் அழகாகிறது! இனி நாங்கள் ஒன்றாக வாழ்க்கையைப் பயணிக்கிறோம். எங்களுக்கு நெருக்கமான அனைவரும் தனியுரிமையை மதிப்பீர்கள் என நம்புகிறோம்,” என்று பதிவிட்டார்.
வனேசா டிரம்ப் என்பவர் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் முன்னாள் மனைவி.47 வயதான இவர் 2005 முதல் 2018 வரை டொனால்டு டிரம்ப் ஜூனியருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
2005-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி, வனேசா & டொனால்டு டிரம்ப் ஜூனியர், ஃப்ளோரிடாவில் உள்ள Mar-a-Lago கிளப்பில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விவாகரத்துக்கான மனுவை தாக்கல் செய்தனர். இவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமை தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகு, விவாகரத்து வழக்கின் தீர்ப்பும் கிடைத்தது.
அதேபோல் 49 வயதான வூட்ஸ், இதற்கு முன்பு ஸ்வீடிஷ் மாடல் எலின் நோர்டெகிரென் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால், 2010-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
டைகர் வூட்ஸ் பலமுறை டொனால்டு டிரம்புடன் கோல்ஃப் விளையாடியுள்ளார். மேலும், 2019-இல், அமெரிக்க அதிபர் டிரம்ப், வூட்ஸுக்கு “Presidential Medal of Freedom” விருது வழங்கினார். இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் சந்தித்து கோல்ஃப் விளையாடியதாகவும் கூறப்படுகிறது.