சிரியாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை.. தாக்குதல் நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பா? பதிலடி கொடுப்போம் என டிரம்ப் ஆவேசம்.. இப்ப தெரியுதா டிரம்ப், இந்தியா தீவிரவாதத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குதுன்னு? இனிமேலாவது தீவிரவாத நாடுகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்..!

சிரியாவில் அமெரிக்க மற்றும் சிரிய படைகளை குறிவைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் மொழிபெயர்ப்பாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டதாக…

isis

சிரியாவில் அமெரிக்க மற்றும் சிரிய படைகளை குறிவைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் மொழிபெயர்ப்பாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு என்று கூறப்படும் நிலையில், சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷாரா வெள்ளை மாளிகைக்கு வருகை தந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் நடத்தியவர் சிரிய பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர் என்று மூன்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தாக்குதல் நடத்தியவருக்கு பாதுகாப்பு படைகளில் தலைமை பங்கு எதுவும் இல்லை என்று சிரிய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நௌரெடின் எல்-பாபா, அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலான அல்-இக்பாரியாவிடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில், “மிகவும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று சூளுரைத்தார். உயிரிழந்த மூன்று தேசபக்தர்களுக்காக இரங்கல் தெரிவித்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த சம்பவத்தை ஒரு பயங்கரமான தாக்குதல் என்று வர்ணித்தார். மத்திய கிழக்கிற்கான அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் மூன்று அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

மத்திய கட்டளை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், சிரிய நகரமான பல்மைராவில் வீரர்கள் ஒரு முக்கிய தலைவரை சந்திக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரை கூட்டணி படைகள் கொன்றதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்ஸெத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரம் வரை அவர்களது பெயர்கள் வெளியிடப்படாது என்று அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்புடையவரா அல்லது குழுவின் சித்தாந்தத்தை ஆதரிப்பவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்க தலைமையிலான கூட்டணி, அண்மைய மாதங்களில் சிரிய பாதுகாப்பு படைகளின் பங்களிப்புடன் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேக நபர்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களையும் தரைப்படை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட 70க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் நடவடிக்கையையும் சிரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டாலும், எந்த அமைப்பும் இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.