கொலம்பியாவை சேர்ந்த கிறிஸ்டியன் மாண்டெனிக்ரோ என்பவர், தான் நடாலியா என்ற பொம்மையுடன் உறவில் இருப்பதாக கூறி முன்னர் சமூக வலைத்தளங்களில் வைரலானார். கிறிஸ்டியன், தாங்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அந்தக் குழந்தைகள் அனைவருமே ஒரு பொம்மை மருத்துவரால் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் கூறினார். இந்த அசாதாரண கதையுடன் அவர் மட்டும் தனியாக இல்லை. மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் என்ற ஒரு பெண்ணும், அதே பொம்மையை திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருமுறை அல்ல, நான்கு முறை கர்ப்பமாகியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய உறவுமுறை அரிதானது என்றாலும், இது ‘ஆப்ஜெக்டோபிலியா’ (Objectophilia) என்று அழைக்கப்படுகிறது.
ஆப்ஜெக்டோபிலியா என்றால் என்ன?
ஆப்ஜெக்டோபிலியா உள்ளவர்கள், மனிதர்களை விட உயிரற்ற பொருட்களின் மீது வலுவான உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் ஈர்ப்பை உணர்கிறார்கள். இந்த பொருள்கள் பொம்மைகள், ராக்டால்கள், சுவர்கள், கார்கள் அல்லது எந்த பொருள்களாகவும் இருக்கலாம். இந்த அனுபவம் உள்ளவர்கள், அந்த பொருளை நோக்கி ஈர்க்கப்பட்டு, அதனுடன் நேரத்தை செலவிட்டு, அதனுடன் ஒன்றிணைந்து ஆழமான உணர்ச்சி பிணைப்புகளை உருவாக்குகிறார்கள். சாதாரண தம்பதியினரை போலவே, இவர்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பார்கள், சண்டையிடுவார்கள் அல்லது பொறாமைகூடப்படுவார்கள்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில் “ஆப்ஜெக்டோபிலியா கொண்ட ஒருவர், உண்மையில் அந்த பொருளுடன் தான் காதலில் இருக்கிறார் என்பதை அறிவார், மேலும் அதனுடன் ஒருவித உறவு இருப்பதாக நம்புகிறார்,” என்று கூறியுள்ளார்.
உறவுகளில் போராட்டங்கள்:
கடந்த மே மாதம், மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ், தனது ராக்டால் கணவன் மார்செலோவுடனான உறவில் பிரச்சினைகள் இருப்பதாக பகிர்ந்து கொண்டார். மார்செலோ தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், அதனால் திருமணத்தை முடித்து கொள்ளத் தான் யோசிப்பதாகவும் கூறினார்.
“இது அவன் துரோகம் செய்வது முதல் முறை அல்ல, குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நான் அவனை மன்னித்துவிட்டேன். மார்செலோ தான் மாறுவான் என்று சொன்னான், ஆனால் இனி என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. எல்லாம் சரியாக இருந்தது, நாங்கள் எங்கள் உறுதிமொழிகளை புதுப்பிக்கவும் கூட ஒப்புக்கொண்டோம். இந்த உறவுக்காக நான் அனைத்தையும் கொடுத்தேன். நான் கோபமாகவும், சோகமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறேன். ‘அவன் ஒரு பொம்மைதான்’ என்று சொல்லாதீர்கள், ஏனென்றால் அவனுக்கு தெரியும் ஒரு காரியம் என்றால் அது ஏமாற்றுவதுதான்! அவன் துணியால் செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் அவன் முட்டாள் இல்லை” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டியன் மாண்டெனிக்ரோவின் வளர்ந்து வரும் குடும்பம்:
இதற்கிடையில், கிறிஸ்டியன் மற்றும் அவரது ராக்டால் மனைவி நடாலியா இடையேயான பிணைப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மூன்று பொம்மை குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் சம்மி என்ற ஒரு புதிதாக பிறந்த குழந்தையையும் தங்கள் குடும்பத்தில் வரவேற்றுள்ளனர். கிறிஸ்டியன் தனிமையில் இருந்து சோர்வடைந்ததால், இந்த பொம்மையுடன் உறவை தொடங்கியதாக கூறப்படுகிறது. 2023 இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து வாழும் இவர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் குடும்ப வாழ்க்கையை பற்றிய புதுப்பித்த தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர்.
இருவருமே பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாகவும், புதிய பொம்மைகளை வாங்கி அவற்றை தங்கள் குழந்தைகள் என்று நம்புவதாகவும், ஒரு கற்பனை உலகில் குடும்பம் நடத்துவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள், மனித உணர்வுகளின் சிக்கலான தன்மையையும், அன்பு மற்றும் பிணைப்புக்கான தேடலும் எந்த வடிவத்திலும் வெளிப்படலாம் என்பதையும் காட்டுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
