ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதுடெல்லிக்கு வருகை தந்திருக்கும் நிலையில், தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தரையிறங்கியது முதல், அவர் தங்கும் விடுதி மற்றும் பயணிக்கவிருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த பல அடுக்கு பாதுகாப்பு வட்டம் அவரை சுற்றி இருக்கும். இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பிரிவுகளின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதின் பயணம் செய்யும் இடங்களிலும், தங்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐந்தடுக்கு பாதுகாப்பு வட்டத்தில், ஒவ்வொரு அடுக்கிலும் பல்வேறு இந்திய பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வெளிப்புற பாதுகாப்பு வட்டத்தை டெல்லி காவல்துறை கவனிக்கும். நடு அடுக்கில் தேசிய பாதுகாப்பு குழுவின் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மிக உட்புறத்திலும் புதினுக்கு நெருக்கமான பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்புக் குழுவின் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். மேலும், ‘ரா’ மற்றும் ஐ.பி போன்ற இந்தியாவின் உயர்மட்ட உளவுத்துறை பிரிவுகளின் ஊழியர்களும் இந்த ஒட்டுமொத்தப் பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.
அதிபர் புதினை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தில், மனித கண்காணிப்புடன் கூடுதலாக, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புதின் இருக்கும் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத பறக்கும் கருவிகள் அல்லது ட்ரோன்களின் நடமாட்டத்தை தடுக்க ட்ரோன் ஜாமர்கள் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். அத்துடன், அவர் செல்லும் பாதைகள் அனைத்தும் முழுமையாக Root Sanitization செய்யப்பட்டுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மறைந்திருந்து தாக்கக்கூடிய அபாயங்களைத் தடுக்க, சிறப்பாக பயிற்சி பெற்ற Anti-Sniper Units நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
புதின் தங்கும் இடம் டெல்லியில் ஒரு கோட்டையை போல மாற்றப்பட்டுள்ளது. புதின் குழுவின் சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட ரஷ்யாவின் தனிக்குழு ஒன்று ஏற்கனவே இந்தியா வந்துள்ளது. இந்த குழுவினர் புதின் செல்லவிருக்கும் அனைத்து இடங்களிலும் தீவிரமான பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொண்டு, இந்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ரஷ்யாவின் இந்த சொந்த பாதுகாப்பு குழுவினருடன், இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி காவல்துறை அதிகாரிகள் மட்டுமே தொடர்பில் உள்ளனர்.
ரஷ்ய அதிபர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது, அவரை சுற்றி சுமார் 100 பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் உடன் பயணிப்பது வழக்கம். அதேபோல, எந்தவொரு தாக்குதலில் இருந்தும் புதினை காக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்ட அவரது சிறப்பு வாகனம், ‘ஔரஸ் செனட்’ (Aurus Senat), அவருடன் இந்தியாவுக்கு பயணிக்கிறது. இந்த பல அடுக்கு மனித மற்றும் இயந்திர பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம், புதினின் டெல்லி பயணம் எந்தவித அச்சுறுத்தலுமின்றி இருப்பதை உறுதி செய்ய இந்தியா முயல்கிறது.
இரு நாட்டுத் தலைவர்களின் இந்த உச்சிமாநாட்டில், முக்கியமாக பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்தே பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மேலும் ஒரு எஸ்-400 ஏவுகணை அமைப்பை கூடுதலாக கொள்முதல் செய்வது குறித்து விவாதிக்கப்படலாம். மேலும், ரஷ்யா உலகின் சிறந்த விமானம் என்று வர்ணிக்கும் சுகோய் 57 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்குவதில் இந்தியாவின் ஆர்வம் குறித்தும் விவாதிக்கப்படும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ உறவை அடுத்த கட்டத்திற்குக்கொண்டு செல்லும் அம்சங்களாகும்.
பாதுகாப்பு ஒப்பந்தங்களை தாண்டி, இரு நாட்டு தலைவர்களும் சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிப்பார்கள். இதில் குறுகிய அணு உலை தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், உலகளாவிய அரங்கில் உள்ள முக்கிய பிரச்சினைகளான தீவிரவாதம் குறித்தும், தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் மோதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இரு தலைவர்களும் வெளிப்படையாக விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
