தாய்லாந்து நாட்டில் நேற்று வரலாறு காணாத அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தாய்லாந்து மருத்துவமனையில் நிலநடுக்கம் காரணமாக நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள பூங்காவுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெட்ட வெளியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் பூங்காவிலேயே குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியான அந்த இளம் பெண், நேற்று முன்தினம் பிரசவத்திற்காக தாய்லாந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணுடன் மற்ற நோயாளிகளும் அவசர அவசரமாக அருகிலுள்ள பூங்காவின் வெட்ட வெளியில் படுக்கையோடு மாற்றப்பட்டனர்.
அப்படி மாற்றப்பட்டு கொண்டிருக்கும்போது, திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி வந்தது. உடனடியாக மருத்துவர்கள் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தனர். வெட்ட வெளி பூங்காவிலேயே அவருக்கு பிரசவம் நடத்தப்பட்டது. அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “நம்பிக்கை” என்று பெயர் வைத்துள்ளனர்.
தாய்லாந்து நாடு முழுவதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை மட்டும் நம்பிக்கையோடு இந்த பூமிக்கு வந்ததாகக் கருதி, “நம்பிக்கை” என்ற பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு, மருத்துவமனை கட்டிடம் குலுங்கினாலும், அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எந்தவித காரணத்திலும் நோயாளிகளை விட்டு செல்லவில்லை. அவர்கள் நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டனர். குறிப்பாக, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததால், தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
