நமது ஊரில் ஒரு முட்டை என எடுத்துக் கொண்டால் அதன் விலை ஐந்து முதல் ஏழு ரூபாய்க்குள் ஏறி இறங்கி கொண்டே இருக்கும். முட்டையின் பயன்பாடு, அது கிடைக்கும் அளவை பொறுத்து அதன் விலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் கண்டு கொண்டே இருக்கும் சூழலில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறு முதல் ஏழு ரூபாய்க்கு ஒரு முட்டை விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
இப்படி எளிய மக்கள் பலராலும் கூட வாங்கக்கூடிய ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் 21 ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மையில் அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு அருகே உள்ள ஒரு நாட்டில் நடந்து அனைவரையும் ஒரு நிமிடம் அசந்து பார்க்க வைத்துள்ளது. பொதுவாக ஒரு முட்டையை நாம் எடுத்துக் கொண்டால் அது வட்டமாகவும், கோள வடிவமாகவும் இல்லாமல் ஒரு தினுசான வடிவத்தில் மாறி மாறி இருக்கும்.
ஒரு முட்டை விலை இத்தனை ஆயிரமா..
ஆனால் இங்கிலாந்து பகுதியில் சமீபத்தில் 200 பவுண்டுகளுக்கு ஏலம் போன ஒரு முட்டை அதாவது இந்திய மதிப்பில் 21 ஆயிரம் ரூபாய்க்கு சென்றதன் காரணம் தான் வியப்பான ஒன்றாக அமைந்துள்ளது. ஏலத்திற்கு போன இந்த முட்டை ஏறக்குறைய மிக மிக முழுமையான ஒரு வட்ட கோள வடிவத்தில் இருந்த நிலையில் பில்லியன் முட்டைகளில் ஒன்று தான் இப்படி இருக்கும் என்ற அபூர்வ தகவலும் வெளியாகி உள்ளது.
ஒரு தொண்டு நிறுவனத்தின் நலனுக்காக இந்த முட்டை ஏலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இதனை சுமார் 200 பவுண்டுகள் கொடுத்து எட் பவுனல் (Ed Pownell) என்ற நபர் வாங்கியுள்ளார். அதுவும் மிகச் சரியான வட்டமான வடிவத்தில் இந்த முட்டை இருப்பதால் அனைவரும் இதனை வியந்து பார்த்துள்ளதுடன் மட்டுமில்லாமல் இதற்கு இத்தனை ரூபாய் கொடுத்தது தவறா என்ற கேள்விக்கு அந்த நபர் இது ஒரு நல்ல விஷயம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழ வைத்த முடிவு..
மேலும் இந்த முட்டை மூலம் கிடைத்த பணத்தை கொண்டு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியும் என்றும் அந்த தொண்டு நிறுவனம் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அபூர்வ முட்டையை கொஞ்ச நாளைக்கு பாதுகாப்பாக வைக்கவும் அதை வாங்கியவர் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு சரியான வடிவத்தில் இருக்கும் முட்டை பற்றிய தகவலும் அதனை ஏலத்தில் ஒரு நபர் அதிக தொகைக்கு வாங்கியதால் அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் மனரீதியாக அவதிப்படும் குழந்தைகள் பலருக்கும் உதவி கிடைக்கும் என்ற தகவலும் அனைவரையும் ஒரு நிமிடம் நெகிழ்ந்து பார்க்க தான் வைத்துள்ளது.