மத்திய தரைக்கடல் பகுதியில் சமீபத்தில் ஆய்வு நடந்த போது 16,770 ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் கப்பலில் வந்து கிலோ கணக்கில் அல்லது டன் கணக்கில் குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி இருக்கலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதிக்கு சென்ற ஆய்வுக்குழு செய்த ஆய்வின்படி, கடலின் அடியில் கண்டறியப்பட்ட கழிவுகளில் 88 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாகவே இருந்ததாகவும், இதன் காரணமாக அரிதான கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 48 நிமிடங்கள் நீர்மூழ்கி கப்பலில், 650 மீட்டர் ஆழத்தில் சென்று இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், மத்திய தரைக்கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கப்பல்களில் இருந்து டன் கணக்கில் குப்பை மூட்டைகளை வீசி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதற்கு சில ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமல்ல, வேறு சில கழிவுகளும் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும், மத்திய தரைக் கடல் தூய்மையற்ற நிலையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், கப்பலில் சென்று குப்பை கொட்டுபவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கடல் என்பது மனிதருக்கு மட்டும் சொந்தமல்ல. ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களுக்கும் அது சொந்தம் என்பதால், அந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.